என் மலர்
சிவகங்கை
சிவகங்கை நகர் போக்குவரத்து தலைமை காவலராக இருப்பவர் நாகராமன். இவர் நேற்று மாலை சிவகங்கை-மதுரை சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். உடனே நாகராமன் மோட்டார் சைக்கிளை மறித்தார். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அவர் மீது மோதி விட்டு தப்பினர்.
இதில் போலீஸ்காரருக்கு கால் விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நாகராமன் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பி.வேளாங்குளத்தை சேர்ந்த அழகுராஜா (23), மாத்தூரை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள சூர்யா என்பவர் தேடி வருகின்றனர். இதில் அழகுராஜா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள மானக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் பிரேமா (வயது19). இவர் அமராவதி புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரேமா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியமூர்த்தி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் கல்லல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாணவி தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே ஆத்தங்குடியை சேர்ந்தவர் அடைக்கண் (வயது55), கூலித்தொழிலாயான இவர் நேற்று இரவு தனது மொபட்டில் காரைக்குடிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஆத்தங்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அடைக்கண் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.
உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை மோசமடைய சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அடைக்கண் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், மாதந்தோறும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்தகோவிலில், ஆடிமாதம் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தற்போது, ஆடிமாதம் தொடங்கியதையொட்டி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையொட்டி அய்யனார், பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரோஜாலிசுமதா தலைமையில் அறங்காவல் குழு தலைவர் ஜெயசங்கர், அறங்காவல் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பாஸ்கரன், சரவணன், கமலாசிகாமணி ஆகியோர் செய்திருந்தனர்.
இதனையொட்டி திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள பகையஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. மதுரை பட்டாலியனில் போலீஸ்காராக உள்ளார்.
இவருக்கும், இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் தேன்மொழி, சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார்.
அதில், கணவர் சுரேஷ் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு தொந்தரவு செய்து வருகிறார். இதற்கு உடந்தையாக அவரது தந்தை ராமச்சந்திரன், தாயார் பிச்சாயி, தங்கை சுகன்யா ஆகியோர் உள்ளனர். மேலும் வரதட்சணை பிரச்சினையில் கொலை மிரட்டல் எனக்கு விடுத்தாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சப்–இன்ஸ் பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி சுரேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளர்.
மானாமதுரை:
மானாமதுரை சிப்காட்டில் பிரபல டி.வி. கம்பெனி தொழிற்சாலை உள்ளது. இங்கு வெளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களின் செல் போன்கள் திருடு போயின. இவ்வாறு 11 செல் போன்கள் திருடு போனது.
இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் தியாகராஜன் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தொழிற்சாலையில் பணிபுரிந்த ரபீக், மணி கண்டன், நெல்லை சுபாஷ், ராஜகம்பீரம் பழனி ஆகிய 4 பேர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் முத்து கிருஷ்ணன், ஊர்க்காவல் படையை சேர்ந்த அந்தோணி ஆகியோர் இன்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது ஒரு இடத்தில் தனியாக நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்த பாகங்களை 2 வாலிபர்கள் கழற்றிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் 2 பேரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்த பேட்டரியை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சூரியன்குளம் கிராமத்தை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (வயது 25), திருமயம் சமுத்திரபட்டியை சேர்ந்த பாஸ்கர் (30) என தெரியவந்தது.
இதில் பாலா மீது புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி என 12 வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து பாலா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காளையார் கோவில்:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தவசியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவரது மனைவி சாத்தாயி (50).
சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதில் அவர் மூழ்கி மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காளையார் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சாத்தாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை:
தேவகோட்டை தாலுகா சாதிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அரவிந்தசாமி (வயது22). இவர் செட்டி நாட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார்.
சம்பவத்தன்று அரவிந்தசாமி, கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த முருகேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர், தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மாயமான அரவிந்தசாமி தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் போட்டியிடுவது குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கீழ் கண்டவாறு நடைபெற உள்ளது.
அதன்படிநாளை (22–ந்தேதி) 10மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருப்பத்தூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள செந்தாமணி மண்டபத்தில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு காரைக்குடி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் காரைக்குடி 100 அடிரோட்டில் உள்ள கோல்டன் சிங்கர் மாகலில் நடக்கிறது.
23–ந் தேதி காலை 10மணிக்கு மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மானாமதுரை பேரூராட்சி மகாலிலும், அன்று மாலை 4 மணிககு சிவகங்கை தொகுதிக்குட்பட்ட கூட்டம் சிவகங்கை கலெக்டர் ஆபீஸ் எதிரே உள்ள மண்டபத்தில் நடக்கிறது.
இந்த கூட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் தேர்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருவேலங்குடி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 52). இவரது மனைவி முத்து (50).
இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் சுதா (28)வுக்கும் பெங்களூருவை சேர்ந்த வைரமுத்து என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் சிங்கப்பூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சுதாவுக்கு திடீரென மனநலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மகளின் நிலையை கண்டு முத்து மிகவும் மனவேதனை அடைந்தார். வாழ்வதைவிட சாவதே மேல் என நினைத்த அவர். விஷ செடியை அரைத்து சுதாவுக்கு கொடுத்துள்ளார். பின்னர் தானும் குடித்து விட்டார்.
விஷம் அருந்திய அவர்கள் வீட்டுக்குள்ளேயே மயங்கி கிடந்துள்ளார். இரவில் வீடு திரும்பிய கருப்பையா, மனைவியும் மகளும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அரைகுரை மயக்கத்தில் இருந்த முத்து, மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்ததை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரையும் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து முத்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெறுகிறது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மழை பெய்யும் போது சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி விடுகிறது.
மானாமதுரை– சிவகங்கை ரோட்டில் சிப்காட், உடைகுளம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பும், தலைமை தபால் நிலையம் முன்பும், பாலம் இறக்கம் ஆகிய பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் சாலையில் குளம்போல் தேங்கி விடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் சிவகங்கை ரோட்டில் மழை நீர் வெள்ளம்போல் செல்லும் போது கழிவு நீர் கால் வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கலந்து செல்வதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. இனி மழைகாலம் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் சாலைகளில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி செய்து தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






