என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மானாமதுரை அருகே ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ‌ஷர்மிளா தேவி (வயது 24). இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும், தட்டிக்குளத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் கடந்த 31/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 21/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    புதுக்கோட்டையில் தங்கி பணி செய்து வந்த ‌ஷர்மிளா தேவி, நேற்று முன்தினம் தட்டிக்குளம் வந்துள்ளார். அங்கு பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை லட்சுமணன், மானாமதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ‌ஷர்மிளா தேவிக்கு திருமணமாகி 31/2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
    திருப்பத்தூர் அருகே வாலிபர் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் கருப்பாயி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் இன்று காலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாச்சியார்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் உடலில் 13 இடங்களில் அரிவாள் வெட்டு இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலையானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.

    சிங்கம்புணரி அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிங்கம்புணரி அருகே உள்ள சிவபொறிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவரது மனைவி ரெவினேஸ்வரி. இவர்களது மகள் சத்யா. இவர் பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வேலை நிமித்தமாக சிங்கம்புணரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சத்யா பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

    இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளை தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ரெவினேஸ்வரி, சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகதாசன் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்.

    மானாமதுரை நகர் பகுதியில் ரூ. 1 கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்க மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் சுர்தாபுரம் கடைவீதி, மாரியம்மன் கோவில் தெரு, பழைய தபால் ஆபிஸ் தெரு, பட்டறை தெரு, குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

    இப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்க வேண்டும் என மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடியிடம் வலியுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நகர் பகுதியில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து மானாமதுரை நகர் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 1 கோடியே 41 லட்சம் செலவில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணியும் தொடங்கியது. பொதுமக்கள் வசதிக்காக சிவகங்கை, பெரம்பலூர், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் எம்.எல்.ஏ. மாரியப்பன் தெரிவித்தார்.

    பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காரைக்குடியில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காரைக்குடியில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சத்திய மூர்த்தி தலைமையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணி வண்ணணிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் கோ‌ஷங்கள் எழுப்பியபடி ராஜீவ்காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் எச். ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கைது செய்து உருவ பொம்மையை கைப்பற்றினர்.

    மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி, சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி, நகரத்தலைவர் பாண்டி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், கோவிலூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அழகப்பன், பழனியப்பன், குமரேசன், முன்னாள் கவுன்சிலர் மெய்யர், வக்கீல் சித்திக் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(3–ந் தேதி) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(3–ந் தேதி) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதைதொடர்ந்து ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, கொத்தமங்கலம், ஒ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சித்தி அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.
    வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதே தமிழ் மாநில காங்கிரசின் இலக்கு என்று ஜி.கே.வாசன் கூறினார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்ட தமிழ்மாநில காங்கிரசின் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் காரைக்குடி சத்குரு ஞானாளந்தா மகாலில் நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் மனுத்தாக்கல் செய்து அதிக இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு ஆகும். மேலும் எங்களுக்கு மதிப்பளிக்கின்ற அதிக இடங்களை தருகின்ற எங்களின் பலம் அறிந்தவர்களோடு கூட்டணி அமைத்து தேர்தலில் சாதிக்கவும் தயாராக உள்ளோம்.

    சமீப காலமாக அரசியலில் நடைபெறும் மாற்றங்களை, மக்கள் பார்த்துக் கொண்டு வருவதால் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். தற்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    மத்திய, மாநில அரசுகள் வறட்சி நிவாரண தொகையை உடனடியாக வழங்கி, விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் நம்பிக்கை துரோகம் நடந்துள்ளது. மக்கள் விரும்பாத திட்டத்தை அவர்கள் மீது திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


    சிவகங்கை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பாலசுப்பிர மணியன், மாநில பொதுச்செயலாளர் சுப. உடையப்பன், மாநில செயலாளர்கள் துரை கருணாநிதி, அழகேசன், ராஜலிங்கம், சந்தியாகு, மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாவட்ட பொறுப்பாளர் மகாதேவன், தலைமைக்கழக பேச்சாளர் கரிகாலன், மாவட்ட துணைத்தலைவர்கள் அசோகன், ராஜேந்திரன், நகரத்தலைவர் செல்வரங்கன், முத்துவேல், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் சார்லஸ் ஜான் கென்னடி நன்றி கூறினார்.

    திருப்பத்தூர் தாலுகா உலகம்பட்டியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிங்கம்புணரி அருகே உள்ள உலகம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராமன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

    சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் உலகம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 250 மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதாக கூறி அங்குள்ள சமுதாய நலக்கூடத்துக்கு பள்ளியை மாற்றினர்.

    பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை ஓரிரு மாதங்களில் கட்டி முடித்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்று வரை பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

    சமுதாயக்கூடத்தில் மாணவ–மாணவிகளுக்கு கழிப்பறை வசதி இல்லை. அந்த பகுதியில் உள்ள திறந்த வெளியையே கழிப்பிடமாக மாணவ–மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். தனித்தனி அறைகள் எதுவுமின்றி ஒரே இடத்தில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ–மாணவிகளும் படித்து வருகின்றனர்.

    இதனால் மாணவ–மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஆகியோருக்கு 2.12.2016 அன்று மனு கொடுத்தோம்.

    அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் முத்தால்ராஜ், பழனியாண்டி ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை சிவகங்கை கலெக்டர் ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    சிவகங்கையில் குழந்தைகள் இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகரைச் சேர்ந்தவர் அஜ்மல்ராஜ் (வயது 30). தனியார் புகைப்பட கேமிராமேன். இவரது மனைவி ராதிகா என்ற ருஷ்யா (27). இவர்கள், கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர்.

    இந்த நிலையில் குழந்தைகள் இல்லாததால், ருஷ்யா மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அஜ்மல்ராஜ் வெளியே சென்று விட்டார்.

    இதனால் வீட்டில் தனியாக இருந்த ருஷ்யா வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாய் பூமயில், சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ருஷ்யாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது.

    திருப்பத்தூரில் தந்தையின் ரூ.10 கோடி சொத்துக்களை மகன் அபகரிக்க போலி உயில்களை தயார் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு. இவருடைய மனைவி பச்சையம்மாள் (வயது 70). இவர்களது மகன் முரளி. இவருக்கு 2 மனைவிகள், 6 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ராஜ்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ராஜ்கண்ணுவுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் பூர்வீக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    அதனை அபகரிக்கும் நோக்கில் முரளி, தந்தை ராஜ்கண்ணுவின் கைரேகையை பதிவு செய்தார். பின்னர் தந்தை ராஜ்கண்ணு தனது சொத்துக்கள் அனைத்தையும் தனக்கு உயில் எழுதி கொடுத்ததாக முரளி ஆவணம் தயார் செய்தார்.

    இதற்கு அப்போதைய திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் அரக்கோணம் ஜோதி வள்ளலார் நகரை சேர்ந்த கருணாகரன் (52) மற்றும் முரளியின் நண்பர்கள் சரவணன், சங்கர், லட்சுமணன் ஆகியோர் உதவியாக இருந்ததாக தெரிகிறது. ராஜ்கண்ணு இறந்தபிறகு அந்த சொத்துகள் அனைத்தையும் முரளி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    இதுகுறித்து முரளியின் தாய் பச்சையம்மாள் கடந்த 24-9-16 அன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளி, அவரது நண்பர்கள் சரவணன், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் கருணாகரன், முரளியின் நண்பர் லட்சுமணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த சார்பதிவாளர் கருணாகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    மானாமதுரை ஆதிமுத்து மாரியம்மன், தயாபுரம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.

    மானாமதுரை:

    மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடந்தது. தினமும் அம்மனுக்கு 16 வகையான அபிசேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் டிரஸ்டி சுப்பிரமணியன் தலைமையில் தீச்சட்டி எடுத்து வைகை ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் கோவில் முன்பு உள்ள அக்கினி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    ரெயில் நிலையம் எதிரே உள்ள ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பூசரகம், அலகு குத்திக் கொண்டு தீ மிதித்து வழிபாடு செய்தனர்.

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அ.தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ளது. பனையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 48). அ.தி.மு.க. தொண்டர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் பாண்டிதுரை மனவேதனை அடைந்து வந்தார். அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாண்டித்துரை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×