search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லறைக்குள் புகுந்த கழிவுநீர் : இறந்த மூதாட்டியின் உடலோடு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    இறந்த மூதாட்டியின் உடலுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    கல்லறைக்குள் புகுந்த கழிவுநீர் : இறந்த மூதாட்டியின் உடலோடு பொதுமக்கள் சாலை மறியல்

    • கல்லறை தோட்டத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி யிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.
    • இறந்த மூதாட்டியின் உறவினர்கள் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் அந்தோணியார் தெருவில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு சவரியார்பாளையம், தோமையார்புரம், ஏ.பி.நகர், ஞானபிரகாசியார்புரம், அந்தோணியார் தெரு பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வருகின்றனர்.

    சுமார் 600 கல்லறைகள் உள்ள இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பேகம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் இங்கு தேங்கி குளம்போல் இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாகவும், தண்ணீர் அதிகரித்து கல்லறைக்குள் செல்ல முடியாத நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இன்று சவரியார்பாளையத்தை சேர்ந்த செபஸ்தியம்மாள்(85) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை புதைப்பதற்காக கல்லறைக்கு எடுத்து வந்தனர். ஆனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கியிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் பிணத்தை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் செழியன் தலைமையில் நகர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்து கொள்வதாகவும் உறுதி அளித்தனர். அதனைதொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடலை அவர்கள் அடக்கம் செய்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×