search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் விபத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
    X

    ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

    கடலூரில் விபத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார்.
    • போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் பழைய காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரமணி (வயது 24). இவர் கடந்த 4.5.2017 அன்று ஊ.மங்கலம் அம்பேத்கர் சிலை அருகே கடலூர்-விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து வீரமணியின் தாய் அனுசுயா, சகோதரி ரதி ஆகியோர் நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான வீரமணியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க வேண்டும் என கடந்த 18.3.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை வீரமணியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீரமணியின் குடும்பத்தினர், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், வீரமணியின் குடும்பத்துக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.23 லட்சத்து 68 ஆயிரத்து 129 வழங்க வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    Next Story
    ×