என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிபடிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைய வேண்டும் - கலெக்டர் அம்ரித் வேண்டுகோள்
- கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன், உயர்வுக்கு படி, உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்லூரி சேர்க்கை முகாம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
இந்த முகாமை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் அம்ரித் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் நான் முதல்வன் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான சிறப்பு முகாம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
நடப்பாண்டுக்கான நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாம் ஏற்கெனவே குன்னூர், கூடலூரில் நடத்தப்பட்டது. இதன்ஒருபகுதியாக தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது.
மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்புடன் நின்று விடாமல் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இங்கு அறிவியல், கலை, மருத்துவம் சார்ந்த படிப்புக்கான வழிமுறைகள் சொல்லித்தரப்படுகின்றன.
இங்கு மாணவ, மாணவிகளுக்கு வங்கி கடனுதவி தரும் சிறப்பு வசதியும், வருவாய்த்துறை சார்பில் சான்றிதழ் வழங்கும் முகாமும் அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே பள்ளிப்படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி டி.ஆர்.ஓ துரைசாமி, ஊட்டி நகரசபை தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அதிகாரி செல்வக்குமார், ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






