என் மலர்
உள்ளூர் செய்திகள்

போடி அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை படத்தில் காணலாம்.
காலையில் பள்ளி, மாலையில் மதுபான பார் : போடியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அரசு பள்ளி
- பள்ளி கட்டிட சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக பள்ளியின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
- அங்கன்வாடி மைய கட்டிட வளாக முன்புறமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் மதுபான பிரியர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி குப்புநாயக்கன்பட்டி அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் கோவில் அமைந்துள்ளது. இந்தத் தொடக்கப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிட சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக பள்ளியின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள 2 மதுபான கடைகளில் மது வாங்கிக் கொண்டு இரவு வேளைகளில் மதுபான பிரியர்கள் இந்தப் பள்ளி வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்தி விட்டு அங்கேயே குடிபோதையில் தங்கி விடுகின்றனர்.
மேலும் குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திற்கு உடைத்து செல்வதால் பள்ளிக்கு வரும் சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிட வளாக முன்புறமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் மதுபான பிரியர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
இவர்கள் குடித்துவிட்டு உடைத்துச் செல்லும் கண்ணாடி பாட்டில்களால் அங்கன்வாடிக்கு வரும் பச்சிளம் குழந்தைகள் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






