என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழுவில் பிரச்சினை: கர்ப்பிணி பெண்ணை மிரட்டியதாக கூட்டுறவு சங்க தலைவர் மீது புகார்
- தாய் சோலையம்மாள், அண்ணன் சதீஷ் ஆகியோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
- நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் என்னையும் எனது தாயையும் மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் சத்யா. இவர், அவருடைய தாய் சோலையம்மாள், அண்ணன் சதீஷ் ஆகியோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துவிட்டு, அவர்கள் கூறியதாவது:-
கோனேரிப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மகளிர் சுய உதவி குழுவில் நாங்கள் இருந்து வந்தோம். கடந்த ஆண்டு வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு எங்கள் குழுவிற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வந்தது. இந்த நிலையில் சொந்த வெறுப்பின் காரணமாக குழுவில் இருந்து சோபியா மேரி என்ற பெண் விலகினார். இதனால் குழுவில் பிரச்சினை ஏற்பட்டது.
இது குறித்து கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரிடம் கேட்டபோது, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் என்னையும் எனது தாயையும் மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்களுக்கு நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், எங்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து அரசால் ஒதுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கடன் தொகையையும் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தனர்.






