என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீட்டால் ஏற்றுமதி அதிகரிப்பு
- இந்தியாவில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரவள்ளி கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
- மரவள்ளி சாகுபடி பரப்பளவில் 25-வது இடத்திலும் உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது.
இந்தியாவில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரவள்ளி கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மரவள்ளி சாகுபடி பரப்பளவில் 25-வது இடத்திலும் உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவில் 0.21 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. மொத்த உற்பத்தி 7.74 மில்லியன் டன் ஆகும் .தமிழகத்தில் 64% கேரளாவில் 32% ஆந்திராவின் சில பகுதிகளில் 1.5 சதவீதமும் நாகலாந்து 1.2 சதவீதமும் அசாம் 0.5% என மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது.
நாட்டின் மரவள்ளிக்கிழங்கு மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் 64% பங்களித்து முதலிடம் வகிக்கிறது. மரவள்ளி கிழங்கிலிருந்து ஸ்டார்ச் மாவு ஜவ்வரிசி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 1.21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது.
குறிப்பாக சேலம் நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது இதில் நாமக்கலில் 21 சதவீதம் தர்மபுரியில் 19% சேலத்தில் 15 சதவீதம் விழுப்புரம் 14% திருச்சி 9 சதவீதம் ஈரோடு 5சதவீதம் திருவண்ணாமலை 5 சதவீதம் உள்பட 14 மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு பரவலாக பயிரிடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நிறுவனமாக செயல்பட்டு வரும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கம் (சேகோ சர்வ் )ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கு விவசாயம் ஜவ்வரிசி ஆலையை செயல்படுத்தி வருகிறது.
பாரம்பரியமிக்க சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதன் பயனாக கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
இந்த நிறுவனம் மூலம் 2.17 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகளை தேக்கி வைக்கும் மின்னணு ஏலம் வசதி உள்ள நிறுவனமாக சேகோ சர்வ் நிறுவனம் விளங்குகிறது. அதேபோல தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கமாக அந்த நிறுவனம் விளங்குகிறது .இந்த சங்கத்தில் 374 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் ஜவ்வரிசிக்கு என்று பிரத்தியோக விற்பனை கேந்திரமாக சேகோ சர்வ் உள்ளது. ஜவ்வரிசியானது பாரம்பரிய மிக்க உணவு பொருளாகும். இது வட மாநில மக்களின் பண்டிகை நாட்களில் மிக முக்கிய உணவுப் பொருளாக உள்ளது.
சேலத்தை பொறுத்தவரை வெண்பட்டு, சேலம் மல்கோவா மாம்பழம் வரிசையில் சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும் .இதன் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஜவ்வரிசி சார்ந்த உற்பத்தி பொருளுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முக்கியத்துவம் பெற முடியும் என்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஜவ்வரிசி ஏற்றுமதிக்கு நல்வாய்ப்பாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் அதன் ஏற்றுமதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஜவ்வரிசி உடல்நலம் காக்கும் முக்கிய உணவு பொருளாக திகழ்கிறது. வட மாநிலங்களில் நோன்பு காலங்களில் ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவை காலையில் உட்கொள்கின்றனர். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜவ்வரிசியிலிருந்து கிச்சடி பாயாசம் வடை ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக மகராஷ்டிராவில் ஜவ்வரிசியில் தயார் செய்யப்படும் வடை மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
ஜவ்வரிசியில் இருந்து தயாராகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது கர்ப்பிணி களின் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல் இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் ஞாபக மறதி நோயான அல்சைமர் வராமல் காக்கிறது. இதனால் ஜவ்வரிசியை உணவு பொருளாக எடுத்து உடலை ஆரோக்கியமாக பாது காப்பதுடன் விவசாயிகளும் வாழ்வாதாரமும் மேம்பட உறுதுணையாக இருப்போம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.






