search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை கே.டி.சி.நகரில் அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
    X

    பாளை கே.டி.சி.நகரில் அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

    • வாலிபர் ஒருவர் பாலசுப்பிரமணியனிடம் நான் பணம் எடுத்து தருகிறேன் என கூறியுள்ளார்
    • வாலிபர் கார்டை மாற்றி கொடுத்து, நூதன முறையில் திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். (வயது 56). இவர் சாயர்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுந்தரவள்ளியும் அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். கடந்த 29-ந் தேதி பாலசுப்பிரமணியன் கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க சென்றார்.

    அப்போது பணம் வரவில்லை. அவரது பின்னால் இருந்த வாலிபர் ஒருவர் பாலசுப்பிரமணியனிடம் கார்டை கொடுங்கள், நான் பணம் எடுத்து தருகிறேன் என கூறியுள்ளார்.

    இதனை நம்பி அவரும் கார்டை கொடுத்தார். அந்த வாலிபர் எந்திரத்தில் கார்டை செலுத்திய போதும் பணம் வரவில்லை. உடனே அந்த வாலிபர் கார்டை பாலசுப்பிரமணியனிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    இந்நிலையில் நேற்று பாலசுப்பிரமணியன் தனது வங்கி பாஸ்புத்தகத்தில் 'என்ட்ரீ' செய்வதற்காக வங்கிக்கு சென்ற போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் குறைந்து இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விபரங்களை கேட்டார்.

    அப்போது தான் அவரது கையில் இருக்கும் ஏ.டி.எம். கார்டு அவருடையது இல்லை என்பது தெரியவந்தது. கடந்த 29-ந் தேதி ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்த போது வாலிபர் கார்டை மாற்றி கொடுத்து, நூதன முறையில் திருடியது தெரியவந்தது.

    அதன்பிறகு அந்த வாலிபர் பாலசுப்பிரமணியனின் கார்டை பயன்படுத்தி பாளை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.50 ஆயிரத்திற்கு நகை வாங்கி உள்ளார். மேலும் 2 முறை ஏ.டி.எம். மூலம் தலா ரூ.10 ஆயிரம் எடுத்துள்ளார்.

    தொடர்ந்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இவரது கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலசுப்பிரமணியன் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யுமாறு கூறினர். அதன்பேரில் பாலசுப்பிரமணியன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×