search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு ரூ.101 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    விவசாயிகளுக்கு ரூ.101 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    • ஆண்டுக்கு ரூ.740 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6,585 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் இதுவரை 78 ஆயிரத்து 486 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டிலும் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டதால் வரலாற்று சாதனையாக கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி பரப்பை நமது மாவட்டம் எட்டியுள்ளது.

    குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானியங்களில் கேழ்வரகு, பயிறு வகை பயிர்க ளில் உளுந்து, எண்ணெய் வித்துப்பயிர்களில் நிலக்கடலை ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    சம்பா பருவத்திற்கு ஏற்ற நீண்ட மற்றும் மத்தியகால நெல் விதைகள் இதுவரை 311 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 389 டன் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 7,827 டன்னும், டி.ஏ.பி. 2,823 டன்னும், பொட்டாஷ் 1,858 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3,694 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், தார்பாய்கள், ஜிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.2023-24-ம் ஆண்டுக்கு ரூ.740 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 22-ந் தேதி வரை ரூ.101 கோடியே 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6,585 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.

    மேற்கண்ட தகவலை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் பேசினார்.

    Next Story
    ×