search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட சாலை பணிகள் ஒரே நாளில் நிறுத்தம்
    X

    மேலப்பாளையத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட சாலை பணிகள் ஒரே நாளில் நிறுத்தம்

    • நெல்லை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சியில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் கேபிள்கள் பதிக்கும் பணிக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு சாலைகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இதனிடையே பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத காரணத்தி னால் சாலைகள் அமைப்பது தாமதமாகி வந்தது.

    இந்நிலையில் மாநகர பகுதி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் சாலை பணிகள் எதுவும் நடைபெறாததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    தற்போது ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலைகள் அமைப்பதற்காக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 2019-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள சொக்கநாதர் கோவில் தெரு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் எடுத்தவர்களை சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மண்டல சேர்மன் சில காரணங்களை கூறி சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒப்பந்ததாரர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களது பகுதியில் சாலை அமைய உள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் சமீப காலமாக கடும் முயற்சி எடுத்து நிறைவேற்றி வருகிறது.

    இந்நிலையில் மேலப்பாளையம் மண்டலத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×