என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
- பணத்திற்கான வட்டித் தொகை உயர்ந்ததால் அவர்களால் பணத்தை கட்ட முடிய வில்லை.
- பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் கேசவன் (வயது51), ரியல் எஸ்டேட் அதிபரான இவர், செங்கல் சூளையும் நடத்தி வந்தார்.
கடந்த மாதம் 19-ம் தேதி மதியம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கே.மல்ல சந்திரம் கிராமத்தில், மோகன் என்பவரிடம் பணம் வாங்க டூவீலரில் சென்ற போது, சொகுசு காரில் வந்த 8 பேர் கும்பல், அவரை வழிமறித்து 8 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலையான கேசவனிடம், பஜ்ஜேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (35), என்.கொத்தூரை சேர்ந்த மோகன்குமார்(29) ஆகியோர், வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்ததால், பணம் கேட்டு தகராறு செய்த கேசவனை கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதனிடையே, கடந்த 21-ம் தேதி பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த சம்பங்கி ராமைய்யா மகன் நாகராஜ் (35), சம்பங்கியப்பா மகன் அபிநத்தா (29), என். கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா மகன் மோகன்குமார் (29), பண்டேஷ்வரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா மகன் ஜலபதி (31), அலேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன்சிவக்குமார் (24), வெங்கடேசப்பா மகன் ஸ்ரீதர் (23), முனியப்பா மகன் முனிராஜ் (33), கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் செட்டிப்பள்ளியைச் நேர்ந்த மஞ்சுநாத்ரெட்டி (32) ஆகிய 8 பேர் வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜ், கடந்த 1-ந் தேதி தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்.
விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த நாகராஜ், என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகியோர் சேர்ந்து, கேசவனிடம் ரூ.10 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
பணத்திற்கான வட்டித் தொகை உயர்ந்ததால் அவர்களால் பணத்தை கட்ட முடியவில்லை. இந்நிலையில், கேசவன் வட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அதனால் இருவரும் சேர்ந்து, கேசவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, பணம் கொடுப்பதாக கூறி கே.மல்லசந்திரம் கிராமத்திற்கு வரவழைத்து, 8 பேர் சேர்ந்து வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 8 பேரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தினேஷ் முன்பு ஆஜர்படுத்தி, அவரது உத்தரவின் பேரில், 17-ந் தேதிவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.






