என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தம்- சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியம் பேட்டி
    X

    ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தம்- சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியம் பேட்டி

    • என்ன காரணத்திற்காக மாநில நிர்வாகி தாக்கப்பட்டு உள்ளார் என்பது முதலில் தெரிய வேண்டும்.
    • குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ரேஷன் கடை தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    கடலூர்:

    சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திர ராஜா (வயது 56). இவர் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருகிறார்.

    நேற்று காலை ஜெயச்சந்திரன் ராஜா சிதம்பரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று வழிமறித்து கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயச்சந்திர ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் ஜெயச்சந்திர ராஜாவை, தாக்கிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் மூடப்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் போலீசார் மர்ம நபர்களைதேடி வந்தனர். இந்நிலையில் பட்ட பகலில் மீண்டும் 2-வது முறை ஜெயச்சந்திர ராஜாவை வெட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநிலத் தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அதன் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியம் அதிரடியாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியம் பேட்டி அளித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை 2-வது முறையாக மர்ம நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நள்ளிரவு மீண்டும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை குற்றவாளிகள் 2-வது முறையாக தாக்கிய நிலையில் போலீஸ் தரப்பு நடவடிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லை. ஏனென்றால் முதல் முறை பாதிக்கப்பட்ட நபரை பட்டப் பகலில் 2-வது முறையாக கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும் என்ன காரணத்திற்காக மாநில நிர்வாகி தாக்கப்பட்டு உள்ளார் என்பது முதலில் தெரிய வேண்டும்.

    உரிய குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் மர்மம் அடங்கியுள்ளதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்கிறோம் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் மக்கள் நலன் கருதி இன்றும், நாளையும் ரேஷன் கடை அடைப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஏற்கனவே போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் தற்போது 2-வது முறையாக ஒத்துழைப்பு வழங்கி உள்ளோம். இதனை போலீசார் பயன்படுத்தி உரிய குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ரேஷன் கடை தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    ஆகையால் தமிழக அரசின் உள்துறை செயலாளர் இதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×