search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்
    X

    கலெக்டர் வளர்மதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்

    • ஆலோசனை‌ கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
    • திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

    ராணிப்பேட்டை:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிலவரங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவ லர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

    முதல்வரின் முகவரி திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

    மேலும், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடி தீர்வும், பதில் மனுக்களுக்கு நேர்மையான பதில்கள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த மனுக்கள் மீது தலைமையிடத்திலிருந்து நேரடியாக மனுதாரரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இதில் அனைத்து துறை அலுவலர்களும் சரியான தீர்வு மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது பரவி வரும் காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளி களின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும்.

    மழை பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் வருகின்றது. தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதி திட்டப்பணிகள் நிலுவையில் இருப்பதை உடனடியாக முடிக்க வேண்டும்.

    மேலும் சிறப்பு செயலாக்க திட்டங்கள், காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×