search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலக கட்டிடம்
    X

    ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலக கட்டிடம்

    • ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலக கட்டிடம் கட்ட வலியுறுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்துறைகளை ஒருங்கிணைத்து அரசு கட்டிடம் இல்லாமல் இருப்பதால் மாவட்டக் கல்வித்துறை நிர்வாகத்தில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலகங்கள் கடந்த பல வருடங்களாக ராமநாதபுரம் அரண்மனை கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தன.

    கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மண்டபம் மாவட்டக்கல்வி அலுவலகம் ஓம்சக்தி நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    கடந்த வருடம் முதன்மைக்கல்வி அலுவலக அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு பல்வேறு ஆவணங்கள் தீயில் கருகின. தமிழக அரசுப்பணிகளில் உயர் பதவிகளில் பணிபுரியும் அதிகாரிகளின் பள்ளி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் மீண்டும் சான்றிதழ்களை பெற அவர்கள் நாடிவருவது மாவட்ட கல்வித்துறையை தான், இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த கல்வித் துறைக்கு தனியாக கட்டிட வசதி அவசியம் தேவைப்படுகிறது.

    ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிக்க, தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட அளவில் கூட்டத்தை கூட்ட, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுத்தாள் மதிப்பீடு போன்ற கல்வித்துறையின் முக்கிய செயல்பாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறை தனியார் பள்ளிகளையே நாடி வருகின்றனர்.

    அரசுத்துறையின் முக்கிய செயல்பாடுகள் தனியார் இடத்தில் நடக்கும் போது அதன் ரகசியம் தனியார் பள்ளிகளுக்கு கசிவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது.எனவே ராமநாதபுரத்தில் கல்வித்துறைக்கென தனிக்கட்டிட வசதி மாவட்ட தேவைப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையில் முதன்மைக்கல்வி அலுவலகம், 3 கல்வி மாவட்ட அலுவலகம், மாவட்ட தேர்வுத்துறை அலுவலகம், ஆர்.எம்.எஸ்.ஏ.மற்றும் எஸ்.எஸ்.ஏ. அலுவலகங்கள், மாவட்ட உடற்கல்வி இயக்குநர் அலுவலகம், சுற்றுச்சூழல்,சாரணர் போன்ற கல்வித்துறையில் பல்வேறு நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இவை அனைத்தும் தற்போது வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் கல்வித்துறை நிர்வாகத்தில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. பல மாவட்டங்களில் கல்வித்துறைக்கென தனி கட்டிட வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆனால் ராமநாதபுரத்தில் கல்வித்துறைக்கு என தனியான கட்டிடங்கள் இல்லை. எனவே தமிழக அரசு ராமநாதபுரத்தில் கல்வித்துறைக்கு என தனியான இடத்தில் ஒருங்கிணைந்த கட்டிட வசதி ஏற்படுத்தி கல்வித்துறை அலுவலகங்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×