search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நாளை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் - கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சையில் நாளை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் - கலெக்டர் தகவல்

    • தஞ்சையில் நாளை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடை பெறுகிறது.
    • மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச் போன்ற உபகரணங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தேசிய பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை வீரசோழன் கோசி மணி மண்டப வளாகத்திலும், 27ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பகோணம் சாக்கோட்டை இலங்கா நகர் சங்கமம் மகாலிலும், 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை வடசேரி ரோடு த்ரீ ஸ்டார் திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.

    சென்னை முட்டுக்காடு தேசிய பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனத்தில் இருந்து உபகரணங்கள் தேர்வு செய்வதற்கான குழுக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாம்களில் முடநீக்கு சாதனம், செயற்கைக்கால், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், பிரெய்லி சிலேட், டெய்சி பிளேயர் மற்றும் காதொலிக்கருவி போன்ற உபகரணங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

    உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்று திறனாளிகள் ஆதார் அட்டை நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், கைபேசி எண், வருமானச் சான்று மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், முகாம் பற்றிய தகவல்களை என்ற 04362-236791 தொலைபேசி எண்ணிலும் பெறலாம்.

    எனவே, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த உதவி உபகரணங்கள் தேவைப்படும் மனவளர்ச்சி குன்றிய, பார்வை திறன் பாதிக்கப்பட்ட, கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளும் மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் குறித்து பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×