search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பாளையம் கிளை கால்வாயில் புதுப்பிப்பு பணிகள் தீவிரம்
    X

    புதுப்பாளையம் கிளை கால்வாயில் புதுப்பிப்பு பணிகள் தீவிரம்

    • கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழத்துவங்கியது.
    • மண் கொட்டி வழித்தடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உடுமலை புதுப்பாளையம் கிளை கால்வாய் கடந்த 1964ல் கட்டப்பட்டது. இந்த கால்வாயில் இரண்டாம் மண்டல பாசனத்தில் 7,219 ஏக்கர், 4-ம் மண்டல பாசனத்தில் 7,310 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.பிரதான கால்வாயில் இருந்து பூசாரிபட்டி ஷட்டரில் பிரிந்து 40 கி.மீ., தொலைவுக்கு இந்த கால்வாய் அமைந்துள்ளது. ஆங்காங்கே ஷட்டர் அமைத்து 30 பிரிவு கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் களிமண் பகுதியில் கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழத்துவங்கியது.

    மழைக்காலங்களில் களிமண்ணில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால் கரைகள் சீரற்றதாக மாறி மண் சரிவும் ஏற்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன் 2இடங்களில் கரை உடைந்து நீர் நிர்வாகம் பாதித்தது. இதையடுத்து, புதுப்பாளையம் கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    அவ்வகையில் நீர் வள நில வள திட்டத்தின் கீழ் கால்வாயில் குறிப்பிட்ட தூரம் கரைகள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மிகவும் சேதமடைந்த பகுதியில் கரைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:- புதுப்பாளையம் கிளை கால்வாயில் 5 கி.மீ., தொலைவுக்கு களிமண் நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் கரைகள் வலுவிழந்துள்ளது கண்டறியப்பட்டது.அந்த இடத்தில் கரைகளை புதுப்பிக்க அரசால் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிதியில் கரை ஸ்லாப் கற்கள் முதலில் அகற்றப்படுகிறது.கரையை ஒட்டியுள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் களிமண்ணை முழுமையாக அப்புறப்படுத்தி அந்த இடத்தில் செம்மண் கொட்டி சீராக்கப்படுகிறது.பின்னர் சமன்படுத்தி அதன் மேல் கான்கிரீட் ஸ்லாப்கள் பதிக்கப்படுகின்றன.

    மேலும் தரைத்தளத்திலும் சிமென்ட் கரை அமைக்கப்படுகிறது.இதனால் மழைக்காலத்தில் களிமண்ணால் கரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். தற்போது 2 கி.மீ., தொலைவுக்கு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.வரும் 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் பணிகள் நிறைவு பெறும் என்றனர்.

    கிளை கால்வாய் கரையில் பொதுப்பணித்துறை ரோந்து வாகனங்கள் செல்ல வழித்தடம் உள்ளது.இந்த தடம் குறிப்பிட்ட இடைவெளியில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. தற்போது இந்த வழித்தடம் பல இடங்களில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் எவ்வித வாகனங்களும் அவ்வழியாக செல்ல முடியாது. ரோந்து பணிகளும் பாதிக்கிறது. பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிக தீர்வாக மண் கொட்டி வழித்தடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Next Story
    ×