search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி  திருவிழா தொடக்கம்
    X

    விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

    • விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
    • 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது

    விராலிமலை,

    தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்றாகும்.இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச் செய்த தலமாக விளங்கி வருகிறது.

    திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை, திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம், ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம் என்ற பல்வேறு சிறப்புகளை கொண்டது இந்த கோவில்.

    அருணகிரிநாதரை முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிரி நாதர் வந்துள்ளார். வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம்.

    இங்கு பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இதன் பெருமைக்கு சான்று. மலைமேல் உள்ள சுப்பிமணியசுவாமி 6 முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்லித கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா, தை திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, பங்குனி உத்திர திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக, காலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

    அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் ஓம்,வேல், சேவல் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் பெற்று காப்பு கட்டி விரதத்தை தொடர்ந்தனர்.

    அதனை தொடர்ந்து தினமும் காலையில் கேடயத்திலும் மற்றும் மாலையில் நாகம், பூதம் யானை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலாநடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி கஜமுக சூரன், 17-ந்தேதி சிம்மமுக சூரன் முருகனுடன் சூரன் போர் புரியும் நிகழ்வும் நடக்கிறது. தொடர்ந்து விழாவின் முக்திய நிகழ்ச்சியாக 18-ந் தேதி காலை பானுகோபன், மாலை 6 மணிக்கு சூரபத்பநாபன் வேடத்திலும் வந்து முருகனுடன் போர் புரியும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது.

    சூரனை வதம் செய்த பின் முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்திறார். இதையடுத்து 19-ந் தேதி மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுதிறது. தொடர்ந்து 20-ந்தேதி திருக்கல்யாண ஊர்வலமும், 21-ந் தேதி ஏகாந்த சேவையுடன் கந்த சஷ்டி விமா நிறைவடைகிறது விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், சிவாச்சாரியார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருதின்றனர்.

    Next Story
    ×