என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆளுங்கட்சிக்கு எடுபிடியாக தேர்தல் ஆணையர் செயல்படுகிறார் என்று புதுக்கோட்டை பிரசாரத்தில் வைகோ குற்றம் சாட்டினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கியில் ம.தி.மு.க பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணி அமைப்பாளருமான வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் அதிக மதுக்கடைகளை திறந்து மக்கள் வாழ்க்கையை சீரழித்து விட்டார். நாள் ஒன்றுக்கு ஒரு குவார்ட்டர் குடிப்பதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்தை பிடிங்கிக்கொண்டு, அந்த குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள இலவசங்களை அ.தி.மு.க அரசு வழங்கி வருகிறது.மதுவால் வருமானம் பெறுவதில் அ.தி.மு.கவும், தி.மு.க.வும் கூட்டாக உள்ளது.

    அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத்தின் நண்பர்கள் அன்புநாதன், செந்தில்நாதன் ஆகியோர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.5 கோடியை பறிமுதல் செய்வதற்காக பறக்கும் படையுடன் சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அங்கு வெறும் ரூ.20 லட்சம் மட்டும் பறிமுதல் செய்ததாக கூறியுள்ளார். மீதி பணம் எங்கே போனது.ஏற்கனவே ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் பணம் கடத்தப்படுவதாக நான் புகார் கூறினேன். ஆனால் 3 நாட்கள் மவுனமாக இருந்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி 4 வது நாள், சிறுதாவூர் பங்களாவில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார்.

    தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆளுங்கட்சிக்கு எடுபிடியா? அவர் என் மீது வழக்கு போட்டாலும் கவலை இல்லை.தே.மு.தி.க.,த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி மது ஒழிப்பு, ஊழலற்ற நல்லாட்சி, விவசாய கடன் தள்ளுபடி, லோக்ஆயுக்தா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன் வைத்து தேர்தலை சந்திக்கிறது. நிச்சயம் இக்கூட்டணி வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்– அமைச்சராவார். அது கூட்டணி ஆட்சியாக இருக்கும். முதல்–அமைச்சர் முதல் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்கப்படும்.

    இந்த தேர்தலில் தி.மு.க. வோ அல்லது அ.தி.மு.க.வோ வெற்றி பெற்றால் அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வை எதிர்த்து யாரும் 3–வது கூட்டணி வைக்கமாட்டார்கள். பின்னர் அவர்களை எதிர்க்கும் துணிவும் யாருக்கும் வராது. எனவே எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள், பெண்கள், புதிதாக வாக்களிக்க உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் நிச்சயம் இக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும். நேர்மையான , மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படும். மது இல்லாத தமிழகத்தை படைக்கும் ஆட்சி அமைய தே.மு.தி.க.,த.மா.கா.,மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கீரனூரில் வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்த்லை புறக்கணிப்போம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
    கீரனூர்:

    கீரனூர் பழைய கள்ளுக்கடைத்தெரு சத்தியமூர்த்தி நகர், பள்ளிவாசல் வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதபுரம், எழில் நகர், வாடிவாசல் தெரு பகுதிகளில் நிரந்தரமாக 80 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. அனைத்து கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை வீட்டுமனை குடியுரிமை பட்டா அரசு தரப்பிலிருந்து கொடுக்கவில்லை.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் 267 குடும்பத்தை சார்ந்தவர்கள் மேலும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    வரும் மே 2–ந் தேதி அனைத்து கட்சி சார்பில் நகர விவசாய சங்கத்தலைவர் கோவில் ராஜ் தலைமையில் இந்திய கம்யுனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடராசன், தி.மு.க நகரச் செயளாளர் பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி அசரம்அலி, நகர காங்கிரஸ் தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும், அடுத்த கட்டமாக ரேசன்காடு, ஆதார் அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேட்பாளர்களின் செலவுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிப்பது தொடர்பாகவும் மற்றும் வெளிமாநில தேர்தல் செலவு பார்வையாளர்கள் வருகை தரும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர்கள் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் துவக்கி வைத்து பேசியதாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற மே16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1511 வாக்குச்சாவடிகள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அதிகாரி, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் 1,2,3 மற்றும் 4 ஆகியோர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த அரசு அலுவலர்கள் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் என மொத்தம் 7291 நபர்களை அவர்களுக்கான விபரங்கள் பதவியின் அடிப்படையில் முதற்கட்டமாக கணினி மூலம் 19.04.2016 அன்று தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் இவர்கள் எந்த சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். முதற்கட்ட பயிற்சி வகுப்புதிருமயம் சட்டமன்ற தொகுதிக்கு திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் வரை செய்யப்படும் செலவினங்கள் அந்தந்த அரசியல் கட்சியின் செலவு கணக்கிலும், வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை நாள் வரை செய்யப்படும் செலவுகள் வேட்பாளர் செலவு கணக்கிலும் சேர்க்கப்பட வேண்டும். பறக்கும் படை, வீடியோ கண்காணிப்புக்குழுவினர் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்ற பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை, கொடிகள், பயன்படுத்தப்படும் வாகனங்கள், உணவு, ஒலிபெருக்கிகள் போன்ற பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் மிகத்தெளிவாக வீடியோவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு காவல் துறையினர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மேலும் இவ்வாறு எடுக்கப்படும் வீடியோவினை செலவின மதிப்பீட்டுக்குழு மிகத்தெளிவாக ஆராய்ந்து ஒவ்வொரு பொருளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள செலவின கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள தொகைகளை மிக சரியாக குறிப்பிட்டு இதன் அனைத்து அறிக்கைகளையும் தனித்தனி பதிவேடுகளாகவும், குறுந்தகடுகளாகவும் பராமரித்து அதன் தகவல்களை தேர்தல் செலவின பார்வையாளரிடம் காண்பிக்க வேண்டும். இதுவரை அரசியல் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் செலவினங்கள் குறித்த அறிக்கையை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.28 இலட்சம் மதிப்பில் மட்டுமே தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே, அனைத்து குழுக்களும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணித்து தேர்தலை நேர்மையாக நடத்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சூரியகலா (திருமயம்), வடிவேல்பிரபு (இலுப்பூர்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆரமுத தேவசேனா, ரவிச்சந்திரன், மனோகரன், தமிழ்மணி, வட்டாட்சியர்கள் திருமலை, சுவாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னமராவதி அருகே விஷ வண்டுகள் கடித்து காட்டெருமை பலி.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் வருவாய் கிராமத்தில் வைரம்பட்டி வெள்ளையன், காடன் ஆகியோர்களுக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த பகுதியில் காட்டு எருமை இறந்து கிடப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் சென்று பார்த்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    வனச்சரகர் சதாசிவம், வனவர்கள் பெரமன், ஆரோக்கியதாஸ், வனக்காப்பாளர்கள் சுந்தர்ராஜ், சங்கிலி, வனக்காவலர் முதலியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த காட்டெருமை விஷ வண்டுகள் கடித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.

    விராலிமலை அருகே ஜவுளி கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

    விராலிமலை:

    விராலிமலை அருகே உள்ள தங்கம் பட்டியை சேர்ந்தவர் பிச்சை (வயது 50), இவளுடைய மகள் ரேவதி (18), ஜவுளி கடையில் வேளை செய்து கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் நேற்று முந்தைய தினம் ரேவதி வேளைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை. இதனால் பிச்சை பல இடங்களிலும் விசாரித்தும் ரேவதி கிடைக்காததால் விராலிமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    இதன் மூலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை அருகே பிறந்த குழந்தையை பார்க்க வந்த தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலியானார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள மேல தேமுத்துப்பட்டி சக்திநகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 50). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சென்னையில் மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ராஜசேகர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேலதேமுத்துப்பட்டிக்கு அழைத்து வந்தார். பின்னர் மனைவியை ஊரில் விட்டு விட்டு, சென்னை சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜசேகரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக 2 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடிப்பதற்காக அங்குள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார். அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த ராமேஸ்வரம்–திருச்சி பயணிகள் ரெயில் ராஜசேகர் மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது உடல் 50 அடி தூரத்திற்கு சிதறி கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    காரைக்குடி ரெயில் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ராஜசேகரின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிறந்த குழந்தையை பார்க்க வந்த போது ராஜசேகர் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கீரனூர்:

    கீரனூரங அருகே உள்ள மங்கா தேவன்பட்டியை சேர்ந்தவர் சைவராஜ் (வயது 55). இவர் அந்த பகுதியல் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அவர் கீரனூருக்கு வேலை காரணமாக சென்றுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து மங்காதேவபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    மோசகுடி விலக்கு பகுதியல் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது எதிரே புதுக்கோட்டையை சேர்ந்த சர்புதீன் (51). பழனிவேல் (48), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சைவராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது அதில் சர்புதீன், பழனிவேல், சைவராஜ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாவீர் ஜெயந்தியையொட்டி திருச்சி- புதுக்கோட்டை மாவட்டத்தில் 19-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படும்.
    புதுக்கோட்டை:

    திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    வருகிற 19-ந்தேதி மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டும், அடுத்த மாதம் 1-ந்தேதி மே தினத்தை முன்னிட்டும், டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடைபெறாமல் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

    எனவே, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மதுபான கூடங்கள்(பார்) மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்கண்ட இரண்டு நாட்களும் மது விற்பனை ஏதும் நடை பெறக்கூடாது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஆலங்குடி பாரதிநகரை சேர்ந்த டாக்டர் சதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அப்பகுதியில் அறிமுகம் இல்லாதவர் என்பதால் அவருக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர் சதீசுக்கு பதில், அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான மெய்யநாதனை அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 4–வது நாளாக கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் இன்று காலை திருவரங்குளம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3பேர் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காங். கட்சி பலவீனமாக இருப்பதால் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று ப.சிதம்பரம் பேசினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில தொகுதிகள் விரும்பிய தொகுதிகளாகவும், பல தொகுதிகள் விரும்பாத தொகுதிகளாகவும் உள்ளது.

    காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்க வில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால் தான் கேட்ட தொகுதிகள் கிடைக்க வில்லை.

    வேட்பாளர்கள் தேர்விலும் ஒரு சில வேட்பாளர்கள் நமக்கு பிடித்தவர்களாகவும், பிடிக்காதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் கூட்டணி தர்மத்தோடு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். வெற்றி தோல்வி வரும் போகும். ஆனால் விடா முயற்சி செய்தால்தான் நமது இலக்கை அடைய முடியும்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் சென்றிருந்தாலும் அவர்கள் மனதில் இருந்து கட்சியை அகற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் சக்கரராவுத்தர் (வயது 45). இவர் கோவில் திருவிழா மற்றும் திருமண விழாக்களுக்கு பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார். இதற்காக அங்கு ஆலை அமைத்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை அங்கு பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் மீது பற்றியதில் அவை பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த விபத்தில் சக்கரராவுத்தர் , பெண் தொழிலாளி ராபிகத் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ராபிகத் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீன்பிடி தடைகாலம் இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 700 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    அறந்தாங்கி:

    தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு மீன் பிடி தடைகாலம் இன்று 15-ந்தேதி முதல் மே மாதம் 30-ந்தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை காலங்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கக் கூடாது என்று மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து கிழக்கு கடற்கடை பகுதியில் உள்ள விசைபடகு மீனவர்கள் யாரும் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் 700 விசைப்படகுகள் மூலம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். தடைகாலம் அமலுக்கு வந்ததையடுத்து இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 700 விசைபடகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தடை காரணமாக கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளமானது வெறிச்சோடியது. மேலும் ஐஸ் உற்பத்தி நிலையம், வெல்டிங் பட்டறை என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

    ஜெகதாப்பட்டினத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்த நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்னும் சில நாட்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ×