என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் பேச்சு
    X

    காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் பேச்சு

    காங். கட்சி பலவீனமாக இருப்பதால் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று ப.சிதம்பரம் பேசினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில தொகுதிகள் விரும்பிய தொகுதிகளாகவும், பல தொகுதிகள் விரும்பாத தொகுதிகளாகவும் உள்ளது.

    காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்க வில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால் தான் கேட்ட தொகுதிகள் கிடைக்க வில்லை.

    வேட்பாளர்கள் தேர்விலும் ஒரு சில வேட்பாளர்கள் நமக்கு பிடித்தவர்களாகவும், பிடிக்காதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் கூட்டணி தர்மத்தோடு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். வெற்றி தோல்வி வரும் போகும். ஆனால் விடா முயற்சி செய்தால்தான் நமது இலக்கை அடைய முடியும்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் சென்றிருந்தாலும் அவர்கள் மனதில் இருந்து கட்சியை அகற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×