என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    மத்திய அரசை கண் டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்அரசு தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    மத்திய அரசை கண் டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்அரசு தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் கே.பி.கே.தங்கே வலு, எஸ்.ரகுபதி, கே.கே.செல்லபாண்டியன், கவிச்சுடர் கவிதைப்பித்தன், சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை விஜயா, த.சந்திரசேகரன், சி.முத்துச் சாமி, அரு.வீரமணி, சுப. சரவணன், செ.அசோக் பாண்டியன், பே.மாரிஅய்யா, ஆ.செந்தில், க.நைனாமுகமது, கே.எஸ்.சந்திரன், கீரை.தமிழ்ராஜா, சு.சண்முகம், பொன்துரை, உதயம் சண் முகம், பி.ராஜேஸ்வரி உள் ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, இளை ஞர் அணி, மாணவர் அணி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளனர்.

    500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இன்று திருமண மண்டபங்களின் வாடகை கட்டணம் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் வீட்டு மனை மற்றும் தங்கத்தின் விலை குறையும் என்று ஹெச் ராஜா கூறினார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ரெயில்வே அகலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் புதுவாகோட்டை மேற்கு குடியிருப்பு பகுதியில் ரெயில்வே பாதை உயரத்தில் அமைக்கப்பட்டு வருவதால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளரும், ரெயில்வே பயணிகள் நலக்குழு தலைவருமான ஹெச்.ராஜாவிடம் புகார் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த ஹெச்.ராஜா, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறும் போது, 30-ந்தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவிடம் எடுத்துக் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இன்று திருமண மண்டபங்களின் வாடகை கட்டணம் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் வீட்டு மனை மற்றும் தங்கத்தின் விலை குறையும்.

    பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள் முன்பு ஏழை மக்கள் நிற்பது மத்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதற்கு காரணம் அவர்கள் தங்கள் சொந்த பணத்தை மாற்ற வருகின்றனர். மத்திய அரசு நடவடிக்கையினால் கள்ளப்பணம், கருப்பு பணம் பயங்கரவாதிகளின் பணம் ஒரே நாளில் ஒழிக்கப்பட்டு விட்டது.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முக்கிய காரணம் நாட்டு மாடுகள் இனங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் மகிழ்ச்சியே. பாதகமாக வரும் பட்சத்தில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்க முடியும்.

    கடந்த 4 ஆண்டுகளாகவே தே.மு.தி.க. தேய்ந்து வந்தது. பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம்.ஆனால் அவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை. பா.ஜனதா, பா.ம.க. மட்டுமே தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. தற்போது தே.மு.தி.க. இல்லாத நிலை உள்ளது.

    முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு ரெயில்வே திட்டங்களை அறிவித்ததோடு சரி. ஆனால் நிதி ஒதுக்கவில்லை. பல்வேறு ரெயில்வே பணிகள் கிடப்பில் கிடந்தன. அதனை நிறைவேற்றுவதற்காகத்தான் ரெயில்வே கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு அரசு வந்தது. ரெயில்வே திட்டங்களையும் அறிவிக்கவில்லை.தற்போது கிடப்பில் கிடக்கும் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    2017-க்குள் திருவாரூர்- காரைக்குடி இடையே அகலப்பாதைப்பணி முடிவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறந்தாங்கி நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் முரளிதரன், ஒன்றிய தலைவர் ஆதிமூலம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    அறந்தாங்கி அருகே ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இறந்தவரின் உடலை புதைக்க இடம் ஒதுக்கீடு பெற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில்தான் புதைப்போம் என இறந்தவரின் உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த கூத்தாடி வயலில் கடந்த 88-ஆம் ஆண்டு சோமசுந்தரதேவர் என்பவர் தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 56 பேருக்கு வீட்டு மனை பட்டாவை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கியது. அந்த இடத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு இறந்த அமிர்தத்தின் கணவர் அடைக்கலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

    அதேபகுதியைச் சேர்ந்த அமிர்தம் என்பவர், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தனக்கு சொந்தமானது என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அமிர்தம் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து அமிர்தத்தின் உறவினர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறும், ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமிர்தத்தின் கணவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் புதைப்பதற்காக புதைகுழி தோண்டி உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தினர் அப்பகுதிக்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடலை புதைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் பரணி, ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, சப்இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடலை புதைக்கக்கூடாது எனக் கூறினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தத்தின் உறவினர்கள் திடீரென்று கூத்தாடிவயல் செல்லும் சாலையில் அமிர்தத்தின் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளதால், பிரச்சினைக்குரிய இடத்தில் உடலை புதைக்க அனுமதி இல்லை. இப்பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டை அணுகி தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து அமிர்தத்தின் உறவினர்கள் உடலை எடுத்துச் சென்று, தங்களது வழக்கமான மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அறந்தாங்கி மாதா கோவில் தெருவில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்வாண்டு விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றுதலுடன் நடைபெற்றது.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி மாதா கோவில் தெருவில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்வாண்டு விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றுதலுடன் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி கிறிஸ்துவ மக்களால் நவநாள் கொண்டாடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கிறிஸ்து அரசர் எழுந்தருள திருத்தேர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கிறிஸ்து அரசர் ஆலயத்திற்கு வந்தது.

    விழாவினை முன்னிட்டு கிறிஸ்து அரசர் ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    விழாவில் அறந்தாங்கி பங்குத் தந்தை ஆரோக்கிய சாமிதுரை, அருட்தந்தை டாக்டர் சகாயம், தஞ்சை மறை மாவட்ட வேந்தர் தாமஸ்ஆல்வாஎடிசன், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே பஸ் நிலையத்தில் துணிப்பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. போலீசார் அதை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனூர் விலக்கு சாலை பேருந்து நிலையத்தில் துணிப்பை ஒன்று கிடந்தது . அதில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குநின்ற பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது, துணிப்பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த குழந்தையை அங்கு போட்டு விட்டு சென்ற தாய் யார்? என்று தெரியவில்லை. தகாத உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை அங்கு போட்டு சென்றாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.

    அரிமளம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம் ராயவரம் புதுமனை 1ம் வீதியை சேர்ந்தவர் அடைக்கப்பன் (வயது60) இவர் ராயவரம் கடை வீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக அரிமளம் போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட அரிமளம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் காஜாமொய்தீன் கடை வீதியில் நின்று கொண்டிருந்த அடைக்கப்பனை சோதனை செய்தார்.

    அப்போது அவரிடம் இருந்து 8 அசாம் மாநில லாட்டரி சீட்டுகளை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார். இதையடுத்து அடைக்கப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை சந்தையில் ரூ.500, ரூ.1000 பிரச்சனையாலும், சில்லரை தட்டுப்பாடாலும் கிராம மக்கள் சந்தையைப் புறக்கணித்தனர். வியாபாரிகள் நஷ்டமடைந்ததால் தங்களது வேதனையைத் தெரிவித்துக் கொண்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சந்தைக்கு வந்து 1 வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வர்.

    இந்நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததாலும், அதனால் ஏற்பட்ட சில்லரைத் தட்டுப்பாட்டாலும் கிராம மக்கள் சந்தைக்கு வருவதை புறக்கணித்தனர். காய்கறிகள் வாங்கத் தேவையான பணம் இல்லாத காரணத்தால் சந்தைக்கு வரும் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

    காய்கறிகள் கொள்முதல் செய்து வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். இதனால் அவர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்துக் கொண்டனர். அதேபோல ரூ.1000 நோட்டோடு சந்தைக்கு வந்தவர்கள் சில்லரை கிடைக் காததால் பொருட்கள் வாங்க முடியாமல் பரிதாப நிலையை அடைந்தனர்.
    அறந்தாங்கியில் குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள சித்திரவிடங்கனைச் சேர்ந்தவர் லெட்சுமணன்.(வயது39). இவர்மீது அறந்தாங்கி போலீஸ் நிலையம் உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் லெட்சுமணன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், மாவட்ட கலெக்டர் கணேஷிற்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று லெட்சுமணனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து லெட்சுமணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    புதுக்கோட்டை அருகே வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் சுனாமி பீதியில் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஒரு மீன்பிடி துறைமுக பகுதியாகும். இங்கு கடற்கரையோரங்களில் சுமார் 2,500 வீடுகளுக்கு மேல் உள்ளன. இவர்கள் பெரும்பாலும் மீன் பிடி தொழிலையே நம்பியே வாழ்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அலையின் வேகமும் அதிகமாக காணப்பட் டது. கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அலையில் அலைக்கழிக்கப்பட்டன.

    மேலும் பலத்த காற்று காரணமாக படகுகளை இயக்க மீனவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இப்படியொரு மாற்றத்தை அப்பகுதி மக்கள் இதுவரை கண்டதில்லை என கூறினர்.

    இதற்கிடையே திடீரென கடல் அலைகள் கட்டுக்கடங்காமல் கரையை தாண்டியது. தொடர்ந்து அலைகளின் சீற்றம் அதிகமாகி வெளியேறிய தண்ணீர் கடற்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் அதிரடியாக புகுந்தது.

    உயரமான பகுதிகளில் சுமார் 20 மீட்டரும், தாழ்வான பகுதிகளில் 100 மீட்டரும் கடல் நீர் வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் சுனாமி வந்து விட்டதாக நினைத்து பீதி அடைந்தனர். பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றனர்.



    இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடலின் சீற்றம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. மீண்டும் கடல் அலைகளை கட்டுப்படுத்தி கடலின் உள்ளே இழுத்தது. ஆனாலும் கோட்டைப்பட்டினம் பொதுமக்கள் இன்னும் சுனாமி பீதியில் தான் உள்ளனர்.

    இந்த கடல் சீற்றம் குறித்து கடலோர பாதுகாப்பு படையினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    அகவிலைப்படியை உடனே வழங்கிடவும், 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம், 9 மாதகால மகப்பேறு விடுப்பு, நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை பொதுஅலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    அகவிலைப்படியை உடனே வழங்கிடவும், 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம், 9 மாதகால மகப்பேறு விடுப்பு, நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை பொதுஅலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ரெங்கசாமி, சத்தி, பழனிச்சாமி, பக்கீர்முகம்மது, இன்னாசி முத்து, குமரேசன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி பேசினர்.

    வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.நாகராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்.ராமச்சந்திரன், வி.ஜெகன்நாதன், எஸ். அண்ணாத்துரை, கே.கருப்பையா, எம்.ராமநாதன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் கே.நாகராஜன் நன்றி கூறினார்.

    கீரனூர் அருகே குரங்குகள் கடித்து 2 பெண்கள் காயம் அடைந்தனர். அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீரனூர்:

    கீரனூர் அருகே குளத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கணபதிபிள்ளை, இவரது மனைவி சாந்தா (வயது 60).

    சம்பவத்தன்று இவர் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 5க்கும் மேற்பட்ட குரங்குகள் அவரது வீட்டிற்குள் புகுந்தது. திடீரென குரங்குகள் அனைத்தும் அவரது மீது பாய்ந்து கடித்து, நகங்களால் பிரான்டியது. இதனால் கூச்சலிட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீரனூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் அதே பகுதியை சேர்ந்த அரசு பேருந்து டிரைவராக பணிபுரிபவர் காமாட்சி, இவரது மனைவி கிருஷ்ணவேனி (38). இவர் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது, வீட்டிற்குள் புகுந்த குரங்கு அவரது கையை கடித்தது. இதனால் காயமடைந்த அவர் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குளத்தூர் பகுதியில் இது போன்ற சம்பவங்களால் ஊர்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊருக்குள் சுற்றித்திரியும் குரங்குகள் ஊர் மக்களை துன்புறுத்துவதோடு, கடித்து காயங்களை ஏற்படுத்துவதோடு, வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. மேலும் அவ்வழியாக செல்லும் பயணிகள், பள்ளிக்குழந்தைகள் அச்சத்துடனையே கடந்து செல்கின்றனர். இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுமாறு குளத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரிமளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.
    அரிமளம்:

    அரிமளம் அருகே உள்ள தெற்கு நல்லிப்பட்டி சேர்ந்தவர் ஜெம்புலிங்கம். இவரது மனைவி மீனாட்சி (வயது 70). இவர் சொந்தவேலை காரணமாக நேற்று முன்தினம் கே.புதுப்பட்டி கடைவீதிக்கு சென்றார்.

    பின்னர் அவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக புதுவயல் அருகே உள்ள கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சக்திவேல் (18) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த நிலையில் எதிர்பாரத விதமாக சக்திவேல் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீனாட்சி மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த மீனாட்சியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×