என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன் (வயது40). இவர் நாகுடியில் உள்ள இந்தியன் வங்கி அருகே செல்போன் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் செந்தில்வேலன் இரவு 9 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதிகாலை 4 மணிக்கு இவர் கடையின் அருகே டீ கடை வைத்துள்ள நல்லம்மாள் என்ற நபரிடம் இருந்து உங்கள் கடையின் பூட்டு உடைந்து கிடப்பதாக செந்தில் வேலனுக்கு போன் வந்தது. இதனால் செந்தில்வேலன் நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாகுடி சப் இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் பூட்டை பிளேடால் வெட்டி உள்ளே சென்றதும், கடையில் உள்ள விலை உயர்ந்த செல் போன்கள், ரீசார்ஜ் கார்டுகள் மற்றும் பென் டிரைவ் என ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. பின்னர் கைரேகை நிபுனர் குழு வரவழைக்கப்பட்டு கைரேகை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னாள் தலைவர் இளங்கோவன் இடையேயான கருத்து மோதல் முற்றி உள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூட்டணி கட்சியான தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் வெள்ளை அறிக்கையோ கருப்பு அறிக்கையோ எது வெளியிட்டாலும் ஜெயலலிதா திரும்பி வந்துவிடுவாரா? என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தி.மு.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் தலைமை தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்படுவதாக தி.மு.க தரப்பில் டெல்லி தலைவர்களிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே திருநாவுக்கரசரின் கருத்துக்கு இளங்கோவன் கண்டனம் தெரிவித்தார். அதோடு திருநாவுக்கரசர் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. கட்சியின் கருத்து அல்ல. திருநாவுக்கரசர் யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடுமையாக சாடி இருக்கிறார். புதுக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இது பற்றி திருநாவுக்கரசர் பேசியதாவது:-
ஜெயலலிதா இறந்தது குறித்து பல்வேறு விவாதங்களை செய்வதால் அவர் திரும்பி வரப்போவதில்லை என்ற அர்த்தத்தில் தான் எனது கருத்தை தெரிவித்து இருந்தேன். நான் சொல்வதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கருத்து தான்.
அந்த கருத்து கட்சியின் கருத்து இல்லையா என்று கருத்து தெரிவிக்கும், விமர்சிக்கும் தகுதி கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முகுல் வாஸ்னிக் போன்ற தலைவர்களுக்குத்தான் உண்டு. வேறு யாருக்கும் கிடையாது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை உடல் நலக் குறைவால் மறைந்த முதல்வரின் இறப்புடன் தொடர்புப்படுத்தக்கூடாது. அப்படி தொடர்புபடுத்தி பேசுவோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இளங்கோவனை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விமர்சித்து இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அரிமளம்:
அரிமளத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தினம்தோறும் பணம் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ரூ 2ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை பணம் பெற்று செல்கின்றனர்.
வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். மையம் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.யில் பணம் எடுக்க முடிய வில்லை. நீண்ட நேரம் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்கசெல்லும் போது வங்கியில் பணம் தீர்ந்து போய்விட்டது. நாளை வாருங்கள் என சில நாட்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய தேவைக்கு பணம் பெற முடியாமல் சிரமம் படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று வங்கியின் வாடிக்கையாளர் சோமு என்பவர் பணம் எடுக்க வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது எனது வங்கி கணக்கில் ரூ 50 ஆயிரம் உள்ளது. எனக்கு மத்திய அரசு கூறியது போல் ரூ.24 ஆயிரம் பணம் தாருங்கள் என கேட்டு உள்ளார்.
அதற்கு வங்கி மேலாளர் பணம் ரூ.4 ஆயிரம் தான் கொடுக்க முடியும் போய் வரிசையில் நில் என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
பணம் 24 ஆயிரம் தர முடியாது என எழுதி தாருங்கள் என சோமு கேட்டு உள்ளார். மீண்டும் வங்கி மேலாளர் பாலசந்திரன் ஒருமையில் பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வங்கியில் பணம் எடுக்க காத்திருந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளர் பாலசந்திரனை முற்றுகையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த அரிமளம் போலீசார் பொதுமக்களை சமாதானம்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு இளைஞர்க்கும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காஜாமொய்தீன் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ராஜாமணி. கடந்த 5-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளிவந்த செய்தியை டி.வியில் பார்த்துள்ளார்.
இதை தொடர்ந்து மனவேதனை அடைந்த ராஜாமணி உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இருந்துள்ளார். உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் உணவு உட்கொள்ளவில்லை. இதனால் ராஜாமணி கடந்த 14-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ராஜாமணிக்கு அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் மறைவில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ராஜாமணியின் தியாகம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தடகளப்போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து கூறியதாவது:-
மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் விருதுநகர் மாவட்டம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 04.12.2016 முதல் 05.12.2016 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்ற திருவப்பூர் நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி கே.வனிதா கலந்து கொண்டு 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதேபோன்று வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.சங்கீதா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மேலும் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற மாணவி கே.வனிதா அகில இந்திய அளவில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இம்மாணவி தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், தலைமையாசிரியர் மணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கியை அடுத்த கருங்குழிக்காடு பகுதியில் சாம்பான் கோவில் என்ற கோவில் உள்ளது. கூரை கொட்டகையைக் கொண்ட இக்கோவிலை சுற்றி மரங்கள் அடர்த்தியாக அமைந்திருக்கும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கருங்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த சுபீர்கான்(வயது28), அஜ்மீர்அலி(29), முகமதுரியாஸ்கான்(24), ஜகுபர்அலி(24), சலீம்(27) ஆகியோர் சாம்பான் கோவில் கொட்டகைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் கோவில் கொட்டகையை தீவைத்து எரித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கும், வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்றும் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். மையங்கள் மூடப்படதால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிபட்டனர்.
இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் இருந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து அன்றாட செலவுக்கு ரூ.2000 எடுத்துக்கொள்ளலாம் என்று பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்திற்கு படையெடுத்தனர். ஆனால் இலுப்பூரில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் மட்டுமே சில நாட்கள் பணம் நிரப்பப்பட்டதால் அந்த ஏ..டி.எம் மையத்தில் பணம் எடுக்க பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்தனர். இருப்பினும் இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ள வேறு எந்த ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் நிரப்பப்படவில்லை.
இலுப்பூர், அன்னவாசல் ஆகிய இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 5 ஏ.டி.எம். மையங்கள், ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளபோதும் ஒரு ஏ.டி.எம் எந்திரத்திலும் பணம் நிரப்பாததால் ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் பணம் எடுக்கலாம் என்று ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கிறார்கள்.
இதன் காரணமாக தங்களின் வங்கிக்கணக்கில் பணம் இருந்தும் அன்றாட செலவிற்கு கூட பணம் எடுக்கமுடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்குமாறு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி முதல் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாக பகுதியில் கொசு மருந்து அடிக்கும் எந்திரத்தை சரக்கு ஆட்டோவில் வைத்து நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 199 விசைப்படகுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் ராமையன் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் திலீப் (வயது 30), பழனிசாமி (42), ராஜன் (40), பிரதீப் (24), பிரசாத் (30), முத்தையன் (50), கலைக்குமார் (34), சரண் (24) ஆகிய 8 பேர் இந்திய கடல் எல்லையில் கடற்கரையில் இருந்து 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்று வந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இருந்தனர். அவர்களை பார்த்ததும் அச்சமடைந்த புதுக்கோட்டை மீனவர்கள் தங்கள் படகுகளை திருப்பி புறப்பட முயன்றனர்.
ஆனால் சற்று தூரத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பேசிய இலங்கை கடற்படை வீரர்கள் யாரும் பயப்படவேண்டாம், நாங்கள் உங்களை கைது செய்ய வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பயத்தில் திலீப், ராஜன், பிரதீப் ஆகிய 3 மீனவர்களும் கடலுக்குள் குதித்தனர்.
இதையடுத்து மீனவர்க ளின் படகுகளுக்கு அருகில் நெருங்கி வந்த கடற்படையினர் திடீரென கடலில் குதித்த மீனவர்களை நோக்கி கடலுக்குள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவர்களை சுற்றி குண்டு மழை பொழிந்தது. இதனால் செய்வதறியாது கடலில் நீந்தியவாறு கதறினர்.
ஆனாலும் இரக்கம் காட்டாத அவர்கள் படகில் ஏறாவிட்டால் தொடர்ந்து சுடுவோம் என்றும் மிரட்டினர். இதற்கிடையே மீனவர்களின் படகுகளில் தாவிக் குதித்த கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களை இரும்பு ராடு, கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
மேலும் அந்த படகில் இருந்த மீனவர் பழனிசாமியை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளனர். அப்போது கடலில் குதித்த 3 மீனவர்களும் படகில் ஏறினர். அவர்களையும் கைகளை பின்னால் கட்டிய கடற்படையினர் கயிற்றால் அடித்துள்ளனர்.
அத்துடன் மீனவர்கள் 8 பேரின் வாயிலும் உப்பை திணித்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வரும் அய்யப்ப பக்தரான திலீப் என்ற மீனவரின் வாயில் இறந்த மீனை திணித்து சாப்பிடுமாறு சித்ரவதை செய்துள்ளனர்.
இனிமேலும் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என்று கூறிவிட்டு இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 8 மீனவர்களும் நேற்று இரவு கரை திரும்பினர். அவர்களை மீட்ட மற்ற மீனவர்கள் மணல்மேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த தாக்குதல் குறித்து மீனவர்கள் திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமயம் மனவளான்கரை கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொமக்களுக்கு தினமும் ஊராட்சியின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த ஒருவாரமாக இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் நேற்று உடனடியாக மனவாளன்கரைக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திருமயம்–கடியாப்பட்டி சாலையில் மறியல் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் கனகவேல் மற்றும் திருமயம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொன்னமராவதி பெருமாள்கோவில் வீதியைச்சேர்ந்தவர் அப்துல்லா மகன் அப்பாஸ். இவர் பொன்னமராவதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று காலை தங்களது வீட்டைப்பூட்டிவிட்டு திருச்சிக்கு மருத்துவமனைக்குச்சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மதியம் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. பதறியபடி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த 5 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த பீரோக்களில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் ரொக்கம், 4 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், 18 பவுன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தவர் பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை பதிவு செய்தனர். பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடந்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி இரவு மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அன்று நள்ளிரவு முதல் புதுக்கோட்டை நகரில் அனைத்து பஸ்களும் ஓடவில்லை. ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முடிந்ததையடுத்து நேற்று அதிகாலை முதல் புதுக்கோட்டை நகரில் பஸ்கள் படிப்படியாக ஓட தொடங்கியது. காலையில் கடைகள் அனைத்து திறக்கப்பட்டது. காய்கறி மார்க்கெட்டும் வழக்கம் போல் இயங்கியது.
புதுக்கோட்டையின் முக்கிய கடை வீதி பகுதிகளான கீழ ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதியில் கடைகள் திறக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் இயங்கின. பள்ளி கல்லூரிகள் மட்டும் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியரின் பரபரப்பு இன்றி காணப்பட்டது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கூட்டம் வழக்கம் போல் காணப்பட்டது.
அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், நார்த்தாமலை, அன்னவாசல், இலுப்பூர், கறம்பக்குடி, திருமயம், திருவரங்குளம், கந்தர்வகோட்டை, காரையூர், பொன்னமராவதி, கீரனூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. பஸ்களும் வழக்கம்போல இயங்கின. இதனால் பஸ்நிலையங்கள், காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அசம்பாவித நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியது.






