என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுடு தொட்டிக்குள்  தொழிலாளி பலி
    X

    சுடு தொட்டிக்குள் தொழிலாளி பலி

    • புதுக்கோட்டை விராலிமலை தனியார் உலோக ஆலையில் சுடு தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி பலியானார்
    • உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு நிலவியது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராஜாளிபட்டியை சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் செல்வம்(வயது 55). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜாளிப்பட்டியில் உள்ள முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். புதுக்கோட்டையில் உள்ள இரண்டாவது மனைவி யுடன் வசித்து வந்த செல்வம் விராலிமலையில் உள்ள தனியார் உலோக தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அன்றாடம் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை உலோக தொழிற்சாலைக்கு பணிக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல அவர் இரவு பணி செய்து வந்தார். அதிகாலை 5 மணி அளவில் அவர் பணி செய்து கொண்டிருந்த போது, தொழிற்சாலையில் உள்ள காஸ்டிங் உலோக சுடு தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதனை கண்ட மற்ற தொழிலா ளர்கள் அவரை மீட்க போராடி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு வந்த விராலிமலை போலீசார் செல்வத்தின் உடலை, சுடு தொட்டிக்குள் இருந்து மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் உடலை வாங்க மறுத்து, தொழிற்சாலையின் முன்பாக செல்வத்தின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலைக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. குறிப்பிட்டவர்கள் அழைக்கப்பட்டு தொழிற்சாலைக்குள் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    விராலிமலை உலோக தொழிற்சாலையில் சுடு தொட்டிக்குள் தொழிலாளி ஒருவர் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×