search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் களை கட்டும் புத்தக திருவிழா
    X

    புதுக்கோட்டையில் களை கட்டும் புத்தக திருவிழா

    • புதுக்கோட்டையில் புத்தக திருவிழா களைகட்டியது.
    • வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா நகர்மன்ற வளாகத்தில் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இலக்கியவாதிகள் மற்றும் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால் களை கட்டும் புத்தக திருவிழாவை காண தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தப்படி உள்ளனர். அரங்குகளில் புத்தகங்கள் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி துறையின் சார்பில், புத்தக திருவிழாவிற்கு வருகை தரும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 7-ம் நாள் நிகழ்வில் கவிஞர் அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'வண்டுகளை சூலாக்கும் வாசப்பூக்கள் ' எனும் தலைப்பில் பேசினார். இதேபோல தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவர் நல்லசிவம், 'தமிழிசை- அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் பேசினார். இவர்களது பேச்சை பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்டனர். விழாவில் புத்தக திருவிழா பாடல் பாடி வழங்கிய பாடகர்கள் செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி தம்பதிக்கு நினைவு பரிசு விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, முத்துநிலவன், வீரமுத்து, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தகதிருவிழா வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது. அன்று விழாவில் சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது."

    Next Story
    ×