என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிசை தீயில் எரிந்து நாசம்
- சுக்கிரன் விடுதி கிராமத்தில் திடீரென குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது
- தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்
புதுக்கோட்டை,
கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளி. இவர் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் குடிசையில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலமுருகன் மகனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று இரவு பாலமுருகனின் குடிசையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாலமுருகனின் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது.






