search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கி அருகே கருகி போன  நெற்பயிர்கள்
    X

    அறந்தாங்கி அருகே கருகி போன நெற்பயிர்கள்

    • நஷ்டஈடு கேட்டு போராட்டத்தில் குதித்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்
    • விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 3600 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதியில் போதிய பருவமழை பெய்யாததால் விவசாயம் செய்து 100 நாட்களிலேயே பயிர்கள் அனைத்தும் கருகி சருகானது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டு சுமார் 1763 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்.இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பிற்கு முன்பே வறட்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லையென வேதனை தெரிவித்த விவசாயிகள் உரிய நிவாரணம் கேட்டு மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

    தகவலறிந்த வட்டாட்சியர் ராஜா, காவல்த்துறையினர் உள்ளிட்டோர் விவசாயிகளை அழைத்து மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும், மேலும் பயிர் காப்பீடு செய்யப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைத்திட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அதிகாரிகள் உங்களது கோரிக்கைகள் கலெக்டர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, இன்னும் 1 மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பைத் தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×