search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு கடையில் இன்று திடீர் தீ விபத்து
    X

    பட்டாசு கடையில் இன்று திடீர் தீ விபத்து

    • புதுக்கோட்டை மணல்மேல்குடியில் பட்டாசு கடையில் இன்று திடீர் தீ விபத்து
    • ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்தன

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மணமேல்குடி கடைவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏ.கே.எம்.ட்ரேடர்ஸ் என்ற வெடிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பூட்டியிருந்த கடையில் இருந்து பெரும் சத்தம் கேட்டுள்ளதை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து அங்கு வந்து பார்த்த போது பூட்டப்பட்ட பட்டாசு கடையில் இருந்து பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன. மேலும் அந்த கடையில் இருந்து பெரும் புகைமூட்டம் எழுந்துள்ளது. ஏற்கனவே அத்திடிப்பள்ளி பட்டாசு விபத்து செய்தி அறிந்ததால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக யாரும் கடைக்கு அருகில் செல்லவில்லை.

    இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை அங்கு வந்தனர். பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர் கடைக்கு அருகில் சென்று கடையின் பூட்டை உடைத்து திறந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சற்று தூரத்தில் நின்று தண்ணீர் அடித்து வெடித்து சிதறிக்கொண்டிருந்த பட்டாசு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அருகில் சென்று தண்ணீர் உதவியுடன் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் தீயானது அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்துஅங்கு வந்த மணல்மேல்குடி போலீசார், தீ விபத்து குறித்து உரிமையாளர் காளிமுத்து, மற்றும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது. மேலும் இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலை நேரம் என்பதாலும், கடை திறக்கப்படவில்லை என்பதாலும், தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×