என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளச்சந்தையில் மது விற்ற 4 பேர் கைது
- கள்ளச்சந்தையில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- மது பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள சாந்தநாத புரம். பஸ் நிலையம் அருகில் இருப்பதால் இங்கு ஏராளமான தங்கும் விடுதி கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
இந்த பகுதியில் மட்டும் 5 மதுபானகடைகள் உள்ளன. பார் வசதிகளுடன் கூடிய இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலை மோதும்.2 கடைகள் அருகருகே அமைந்துள்ளதால் மதுபான பிரியர்களை தங்கள் பாருக்கு இழுக்க போட்டியும் நடப்பதுண்டு.
இந்த நிலையில் நேற்று மிலாடி நபியை முன்னிட்டு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால் சாந்தநாதபுரம் பகுதியில் டாஸ்மாக் பார்களில் விற்பனை படு ஜோராக நடந்தது. இதை போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கடைகள், பார்கள் அரசு விடுமுறை நாட்களில் தடையை மீறி இயங்கின.
432 பாட்டில் பறிமுதல்
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இச்சடி அருகே சட்ட விரோத விற்பனைக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட 432 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வசந்தகுமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 18 மது பாட்டில்கள், ஒரு செல்போனையும், புதுக்கோட்டை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட பிஎஸ்என்எல் ஆபீஸ் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பாலு என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஜெயச்சந்திரன் என்பவரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 91 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தனிப்படை போலீசார் இன்று அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு இதுவரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து சுமார் 600 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.எனினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கூட்டங்களில் தொடர்ந்து சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






