என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் 18 பவுன் ரூ.4.5 லட்சம் கொள்ளை.
- பட்டப்பகலில் துணிகரம்
- மொய்பணம் மொத்தமும் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அம்மானிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா ( வயது 40) விவசாயியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கருப்பையா தனது வீட்டை பூட்டி விட்டு வீட்டின் அருகே சாவியை வைத்துவிட்டு அருகில் உள்ள கறம்பக்குடிக்கு சென்று விட்டார். ஆடு மேய்க்க சென்று ஆடுகளை மேய்த்து விட்டு மாலை 5:30 மணி அளவில் உமாராணி வீட்டுக்கு வந்த போது அப்போது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் மேலும் 4.5 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்ததை கண்டு கதறி அழுதார். கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் கருப்பையாவின் மகன்களுக்கு காதணி விழா நடைபெற்றது. அதற்கு மொய்ப்பணமாக கிடைத்த பணமும் செய்முறையாக வந்த நகையும் திருடு போனதை நினைத்து குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி கரம்பக்குடி காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் கரம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து பதிவு செய்தனர். பட்டப் பகலில் வீடு புகுந்து 18 பவுன் நகைகள் மற்றும் நான்கு அரை லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.






