search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகள் கூட்டத்தால் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்க திட்டம்: அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி ரெயில்பாதை அமைக்க ஆய்வு
    X

    பயணிகள் கூட்டத்தால் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்க திட்டம்: அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி ரெயில்பாதை அமைக்க ஆய்வு

    • கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும்.
    • அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.

    பொன்னேரி:

    சென்னை நகர மக்களின் போக்குவரத்துக்கு புறநகர் மின்சார ரெயில் சேவை பெரிதும் கைகொடுத்து வருகிறது. குறைந்த கட்டணம், விரைவான பயணம் என்பதால் மின்சார ரெயில் சேவையை பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்துவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும். எனவே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து அத்திப்பட்டு வரை 4 ரெயில்பாதைகள் உள்ளன. ஆனால் அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.

    இந்த பாதையில் புறநகர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவ தால் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது.

    மேலும் சரக்கு ரெயில், விரைவு ரெயில்கள் காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் விம்கோ நகர் இடையே குறைந்த வேகத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படு கின்றன. இதனால் கால தாமதம் ஏற்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு மற்றும் எண்ணூரில் இருந்து புற நகர் ரெயில்களில் வரும் பெரும்பாலானோர் சென்ட்ரலில் இறங்கி, தாம்பரம் அல்லது செங்கல்பட்டு பகுதியில் உள்ள பணியிடங்களுக்குச் செல்வார்கள்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் ரெயில்கள் விம்கோ நகருக்கு பின்னர் மெதுவாக இயக்கப்படுகிறது. மேலும் பேசின் பாலத்தை கடக்க சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் தற்போது பலர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரெயிலுக்கு மாறி சென்ட்ரலை விரைவாக வந்தடையும் நிலை உள்ளது.

    இதற்கிடையே கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையை அதிகரிக்க அத்திப்பட்டு -கும்மிடிப்பூண்டி இடையே புதிதாக 3-வது, 4-வது ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை தயாரானதும் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் பாதை பிரச்சினை உள்ளது. இதனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் மின்சார ரெயில் சேவைகளை அதிகரிப்பது சாத்தியமில்லை. சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், சென்னை - அத்திப்பட்டு இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே 2 ரெயில் பாதைகள் மட்டுமே உள்ளன. எனவே இந்த பகுதியில் 3-வது, 4-வது வழித்தடத்திற்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின்படி புதிய ரெயில்பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×