என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் 987 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
- பெரம்பலூரில் நடந்த அரசு விழாவில் 987 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அஹமது, கலெக்டர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சிறப்பு திட்டம் செயல்பாடுகள், நலதிட்ட உதவிகள், கடனுதவிகள் போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.
வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் 987 பயனாளிகளுக்கு ரூ.20.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
கூட்டத்தில் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் முத்தமிழ்செல்வி, எஸ்பி ஷ்யாம்ளாதேவி, டிஆர்ஓ வடிவேல்பிரபு, ஆர்டிஓ நிறைமதி, நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன்கள் மீனாம்பாள், பிரபா, ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






