என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொது மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
- குடிநீர் வழங்காததை கண்டித்து சங்குபேட்டை சிக்னலில், பெண்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- பெரம்பலூர் துறைமங்கலம் பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகருக்கு கொள்ளிட குடிநீர் வழங்கும் பணி பெரம்பலூர் சங்குப்பேட்டை உள்பட அனைத்து வார்டு பகுதிகளிலும் கடந்த 20 நாட்களாக தடைபட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று சங்குபேட்டை சிக்னலில், சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதே போல் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில், 8வது வார்டு மற்றும் 9 வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு கடந்த 1 மாதமாக காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று மாலை 6 மணியளவில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவறிந்து வந்த, நகராட்சி அதிகாரிகள் நாளை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் பெண்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில், ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






