என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணமா? என்னிடம் சொல்லுங்கள்.... - கலெக்டர்
    X

    குழந்தை திருமணமா? என்னிடம் சொல்லுங்கள்.... - கலெக்டர்

    சிறார் திருமணம், பெண் வன்கொடுமை நடைபெற்றால் தனது செல் போனுக்கு தகவல் ெதரிவிக்கலாம் என மாணவ, மாணவிகளுக்கு பெரம்பலூர் கலெக்டர் அறிவுறுத்தினார்

    பெரம்பலுார்:

    பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழுநீக்க நாள் முன்னிட்டு மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது, சுத்தமற்ற குடிநீரை குடித்தல் மற்றும் சுகாதாரமில்லாத இடங்களுக்கு செருப்பு அணியாமல் சென்று வரும் போதும் உடலுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள குடற்புழு நீக்க மாத்திரை அரசால் வழங்கப்படுகின்றது.குடற்புழு நீக்க மாத்திரையினை வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 1,71,590 குழந்தைகள் மற்றும் 45,034 பெண்கள் பயனடைய உள்ளனர். மேலும் உங்கள் ஊரில் அல்லது உங்கள் தெருவில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்தோ, வன்கொடுமை நிகழ்வது குறித்தோ உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் நீங்கள் பயமின்றி அதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். இதுகுறித்த தகவலை யாரிடம் தெரிவிப்பது, தகவல் சொல்பவரைப்பற்றி வெளியில் தெரிந்துவிடுமோ என்ற சந்தேகங்கள் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு தகவல் தெரிந்தால் பயமின்றி மாவட்ட கலெக்டரான என்னிடமே அலைபேசிவாயிலாக தெரிவிக்கலாம். எனது அலைபேசி எண் 94441 75000 ஆகும்.அனைவரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மாணவ, மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ள வசதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள்ள அறிவிப்பு பலகைகளில் கலெக்டரின் செல் போன் எண்ணை எழுதி வைக்க வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியின் போது, மருத்துவப் பணி துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×