என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் கார் விபத்து-சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற குழந்தை உள்பட 2 பேர் பலி
- கார் விபத்தில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற குழந்தை உள்பட 2 பேர் பலியானர்
- டிப்பர் லாரி ஒன்று திடீரென்று வலதுபுறமாக திரும்பி ரோட்டின் குறுக்கே கடந்துள்ளது
பெரம்பலூர்:
கள்ளக்குறிச்சி உகையூர் பகுதியை சேர்ந்த செல்வா என்பவரின் மனைவி மகேஸ்வரி(வயது22), இவர்களின் மகள் சாருநேத்ரா(5) மற்றும் கடலுார் மாவட்டம் வேப்பூர் சேர்வராயன் குப்பத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) ஆகியோர் சிங்கப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். காரை முத்துசாமி(37) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர்களை வழி அனுப்புவதற்காக ஜெயவேல், நாகமுத்து ஆகியோர் உடன் சென்றனர்.
கார் பாடாலுார் அருகே திருவன்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென்று வலதுபுறமாக திரும்பி ரோட்டின் குறுக்கே கடந்துள்ளது. இதனை எதிர்பாராத கார் டிரைவர் முத்துசாமி விபத்தினை தவிர்க்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் டிப்பர் லாரியின் பின்புறமாக மோதி கார் விபத்துக்குள்ளானது.
டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த பெரம்பலூர் குளக்கானத்தம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மகா பிரபு(47) உள்ளிட்ட அனைவரையும், அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 வயது குழந்தை சாருநேத்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






