search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

    • 3718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 1026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
    • மாற்று திறனாளி மாணவர்கள் 10808 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது.

    10-ம் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 9,14,320 மாணவ-மாணவிகள் எழுதினர். மாணவர்கள் 4,59,303 பேரும், மாணவிகள் 4,55,017 பேரும் தேர்வு எழுதினார்கள்.

    இதேபோல மார்ச் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை 7.73 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றப்பட்டன.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.

    அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 4,30,710 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.66 சதவீதம் ஆகும். மாணவர்கள் 4,04,904 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.16 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்வில் மொத்தம் 9,12,620 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8,21,994 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 90.07 ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகும்.

    இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,638 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,502, உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 5136 ஆகும்.

    3718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 1026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 87.45 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.38 சதவீதமும், இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 91.58 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.25 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

    தமிழ் பாடத்தில் 95.55 சதவீதம் மாணவ-மாணவிகளும், ஆங்கிலத்தில் 98.93 சதவீத மாணவ-மாணவிகளும், கணிதத்தில் 95.54 சதவீத மாணவ-மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 95.75 சதவீத மாணவ-மாணவிகளும், சமூக அறிவியல் பாடத்தில் 95.83 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஆங்கில பாடத்தில் 89 பேர் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3649 பேரும், அறிவியல் பாடத்தில் 3584 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மாற்று திறனாளி மாணவர்கள் 10808 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.77 ஆகும். சிறை கைதிகள் 264 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 42.42 ஆகும்.

    பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம் பெற்றது. 2வது இடத்தை சிவகங்கையும் 97.53%, விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் 96.22% பிடித்தது.

    மாணவர்கள் http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணைய தள முகவரிகளில் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித் தேர்வர்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பித்தபோது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×