என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் தடையால் குடிநீர் தடுப்பாடு - பொதுமக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு
    X

    மின் தடையால் குடிநீர் தடுப்பாடு - பொதுமக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

    • மேலானூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
    • தகவலறிந்து அங்கு வந்த வெங்கல் காவல் நிலைய போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள மேலானூர் ஊராட்சியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சிக்கு கீழானூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால், காக்களூரில் ஏற்பட்ட மின்தடையால் மேலானூர் மின் பாதையை துண்டித்துவிட்டு காக்களூர் பகுதிக்கு மின் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மேலானூர் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது பூண்டி துணை மின் நிலையத்தில் இருந்து உங்கள் ஊராட்சிக்கு மின் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்களாம். ஆனால்,இந்த ஊராட்சிக்கு 4 நாட்களாக மின் சப்ளை செய்யப்படவில்லை.

    இதுகுறித்து மின்வாரிய பொறியாளர், துணை கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர் உள்ளிட்டவர்களை கிராம மக்கள் தொடர்பு கொண்டும் எந்த வகையான பயனும் கிடைக்கவில்லையாம். காக்களூர் பகுதிக்கு மின் சப்ளை செய்வதுதான் எங்களுக்கு தற்போதைய முக்கிய பணியாக உள்ளது என அலட்சியமாக பதில் அளித்தார்களாம். இதனால் இந்த ஊராட்சியில் மின்தடை ஏற்பட்டதால் குடிநீர் சப்ளை செய்யும் பணி தடைப்பட்டது. இதனால் கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று குடிதண்ணீர் கொண்டு வரும் அவல நிலை ஏற்பட்டது.

    மின்தடையால் முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் மின்விசிறி வசதி தடைபட்டதால் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இரவு திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வெங்கல் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறினார். இதனால் போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர்.

    மின் சப்ளை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும், பழைய வழித்தடத்திலேயே மின் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×