search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில்   இடம் பற்றாக்குறையால்  நோயாளிகள் அவதி: புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டுகோள்
    X

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தாய், சேய் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

    அரசு ஆஸ்பத்திரியில் இடம் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி: புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டுகோள்

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
    • தினமும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டமாக கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

    அதன்படி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கட்டுவதற்கு கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தில் 20.58 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்ட மத்திய அரசு ரூ.195 கோடி, மாநில அரசு ரூ.186.76 கோடி, ஆக மொத்தம் ரூ.381.76 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

    அதன்படி கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பணிகள் நிறைவடைந்து பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 12- ந்தேதி கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 150 மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி படிப்பில் சேர்க்கை நடைபெற்று மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால் மாவட்ட மருத்துவமனை மட்டும் கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் தாய் சேய் தனிப்பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, மனநிலை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், மருந்தகம் உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க போதிய இடவசதி இல்லாமலும், பணியி டங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், குடிநீர் வசதி பற்றாக்குறை உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவ மனையில் உள் நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் அமைக்க போதிய இட வசதி இல்லாமல் சாய்தளம் அமைக்கப்பட்ட பகுதியில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவசர சிகிச்சை வார்டுகள், பிரசவம் பார்க்கும் வார்டுகள் ஆகியவற்றில் போதிய இடவசதி இல்லாமல் உள் நோயாளியாக மருத்துவம் பார்ப்பவர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி பயன்பாட்டிற்கு வந்த நிலையில், 7- தளங்களை கொண்டு 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதில் உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட மருத்துவமனையில் உபகரணங்கள் பொருத்தும் பணிகளை உடனடியாக விரைந்து முடித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×