என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈஷா மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்பு- போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
- அமித்ஷா வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- போலீஸ் அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
வடவள்ளி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 25-ந் தேதி 2 நாள் பயணமாக கோவை வருகிறார். அன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். இரவில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மறுநாள் 26-ந் தேதி காலை பீளமேடு அருகே எல்லைத்தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார். மாலையில் ஈஷா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையம், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் ஈஷா யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். விழா நடைபெறும் ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரமாண்ட நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார். அது திறந்தவெளி மைதானம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்தார்.
அவருடன் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.






