search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது: ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
    X

    இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது: ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

    • தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
    • இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    சென்னை:

    பண்டிகை, விடுமுறை மற்றும் முக்கிய சிறப்பு நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்தாலும் கடைசி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறப்படுவதால் போக்குவரத்து சேவையை அதிகமாக்குவது அவசியமாக மாறிவருகிறது.

    இந்நிலையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் ஆம்னி பஸ்களை நாடி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது.

    இதையடுத்து ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இரட்டிப்பு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    தற்போது ஆயுதபூஜை விடுமுறை தொடர்ந்து 4 நாட்கள் வந்ததால் ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டு விட்டதாக புகார்கள் எழுந்தன. சில ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 150 சதவீதத்துக்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. இதற்காக அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    அப்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி 120-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. அந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுவதும் தடை செய்யப்பட்டது.

    மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அந்த ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பஸ்களை சிறை பிடித்ததோடு அபராதமும் விதிக்கப்பட்டதால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    ஆம்னி பஸ் கட்டணத்தை ஒழுங்குபடுத்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டுள்ளோம்.

    கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கி வந்தது.

    இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பஸ்களை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறை பிடித்தும், மீண்டும் சிறை பிடிப்பதை நிறுத்தக் கோரியும் இன்று (24-ந்தேதி) மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது.

    இன்று ஆம்னி பஸ்களில் 1 லட்சத்துக்கு மேலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்களை போக்குவரத்து துறை சார்பாக வழியில் இறக்கி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் கனத்த இயத்துடன் இதனை அறிவிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அதுபோல மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் இன்று மாலை முதல் திரும்புவதற்கு ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர்.

    இன்று மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் ஸ்டிரைக் அறிவிப்பால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாற்று ஏற்பாடுகள் கடைசி நிமிடத்தில் செய்யமுடியாத நிலையில் பெரும்பாலானோர் இன்று சொந்த ஊர்களில் இருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ஆம்னி பஸ் ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×