என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது ஆம்னி பஸ் மோதல்- பூ வியாபாரி பலி 18 பயணிகள் காயம்
    X

    லாரி மீது ஆம்னி பஸ் மோதல்- பூ வியாபாரி பலி 18 பயணிகள் காயம்

    • பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது, பஸ்சுக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.
    • விபத்து குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    வாடிப்பட்டி:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து நேற்றிரவு ஒரு ஆம்னி பஸ் கோவைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் நெல்லை, தூத்துக்குடி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 41 பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பஸ்சை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ராஜேஷ் (வயது30) என்பவர் ஓட்டி சென்றார். பஸ் இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலி பட்டி மேம்பாலத்தில் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

    அவர்களில் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்த பஸ் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அவர்களில் படுகாயமடைந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எத்திலிப்பட்டி கிராமம் காமாட்சிபுரத்தை சேர்ந்த பூ வியாபாரியான முருகன் (32) என்பவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தில் காயமடைந்த கோவையை சேர்ந்த ஜெகன்(23), சிவா(28), செண்பகராஜன்(47), பிரபு(38), சிவக்குமார்(33), பொள்ளாச்சியை சேர்ந்த ராதா(48), ஞானதீபா(16), சுந்தர்ராஜன்(58), தீபாலட்சுமி(70), உடுமலையை சேர்ந்த சாந்தி(34), திருச்செந்தூரை சேர்ந்த முத்தம்மாள்(53), தூத்துக்குடியை சேர்ந்த நளினி(35), நெல்லை ராதாபுரத்தை சேர்ந்த மாசாணம்(60), செம்பாலை(34), புதுவை கயல்விழி(48),விழுப்புரம் ரவீந்திரகுமார்(42), திண்டுக்கல் நிலக்கோட்டை காந்தி(41), விளாம்பட்டி வினோத்பாபு(20) ஆகிய 18 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×