search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரத்தில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    ராமநாதபுரத்தில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • மரங்கள் முறிந்து மின்தடையும் ஏற்பட்டது.
    • மாவட்டத்தின் மொத்த மழை அளவு 542.10 மி.மீட்டர் ஆகும்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. ராமேசுவரத்தில் மட்டும் 44 செ.மீட்டர் மழை பதிவானது.

    இந்த நிலையில் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் நகரில் நேற்று காலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இதனால் நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம், பாம்பன், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து மின்தடையும் ஏற்பட்டது.

    கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தொடர் கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

    கடலோர பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது. ரோடுகள் சேறும் சகதியுமாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மழைகால காய்ச்சல், தலைவலி, இருமல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி பொதுமக்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநாதபுரம்-22, மண்டபம்-44.80, ராமேசுவரம்-48, பாம்பன்-46.10, தங்கச்சி மடம்-62.20, பள்ள மோர்குளம்-15.20, திருவாடானை-37, தொண்டி-34.60, வட்டாணம்-45.20, தீர்த்தண்டதானம்-48.60, ஆர்.எஸ்.மங்கலம்-29, பரமக்குடி-25.40, முதுகுளத்தூர்-18, கமுதி-26, கடலாடி-20, வாலி நோக்கம்-20.

    மாவட்டத்தின் மொத்த மழை அளவு 542.10 மி.மீட்டர் ஆகும்.

    இன்றும், நாளையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை நகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    கனமழை எச்சரிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×