என் மலர்
உள்ளூர் செய்திகள்

20 நாட்களில் உச்சநீதி மன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை: தென்பெண்ணை நதிநீர் விவகாரத்தில் உரிமையை நிலை நாட்ட வேண்டும் -தருமபுரி, கிருஷ்ணகிரி விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்
- நீர் பங்கீடு வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
- பா.ஜ.க. அரசுக்கு சிக்கல் நேராத வண்ணம் நடக்க முயற்சிப்பதாகவும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
தருமபுரி,
தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீ. நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீ. நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கி.மீ. நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி.மீ. நீளத்திற்கும் பாய்ந்து இறுதியில் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்நிலையில் தென்பெண்ணையாற்றில் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால் கர்காடகா அரசுக்கு முயற்சிக்கு தடை விதிக்க கோரியும், தென்பெண்ணையாற்றின் நீர் பங்கீடு வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணையில் உள்ளது. கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். ஏன் இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, 4 வார காலத்திற்குள் தீர்ப்பாயம் அமைத்து அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும்,கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு சிக்கல் நேராத வண்ணம் நடக்க முயற்சிப்பதாகவும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
அடுத்த கட்ட விசாரணைக்கு சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரும் நெருக்கடியை பொறுத்தே உரிய தீர்வுக்கு வழி கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.






