search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேகமலை தேயிலை தோட்டங்களில் புதுமண தம்பதிகள் போட்டோஷூட் நடத்த கட்டுப்பாடுகள்
    X

    கோப்பு படம்

    மேகமலை தேயிலை தோட்டங்களில் புதுமண தம்பதிகள் 'போட்டோஷூட்' நடத்த கட்டுப்பாடுகள்

    • தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
    • சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.

    சின்னமனூர் :
    தேனிமாவட்டம் சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மேகமலை கிராமம். 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பகுதியில் அதிகளவில் தேயிலை விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
    திரும்பிய திசையெல்லாம் பசும்போர்வை போர்த்தியது போல பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் குளிர்ச்சியான சீதோசன நிலையே காணப்படும். இங்கு யானை, காட்டுமாடு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
    மேலும் புலிகள் சரணாலய பகுதிகள் இருப்பதால் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் மலைச்சாலை போக்குவரத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருந்தபோதும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மேகமலைக்கு வராமல் செல்வதில்லை. தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.

    குறிப்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை அழைத்து வந்து போட்டோஷூட் எடுப்பதற்கு சிறந்த இடமாக இது உள்ளது. தோட்டங்களின் மையப்பகுதிகளுக்கு சென்று பலமணி நேரம் செலவிட்டு விதவிதமான புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதற்காக குடை, பிளாஷ், பலூன், பந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து போட்டோஷூட் நடத்துகின்றனர்.

    அவை முடிந்ததும் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக்பை உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
    தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் இங்கு அட்டை புழுக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் தோட்டங்களுக்கு வரும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்பை தடுக்க இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×