search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனித்தேரோட்டம்

    • பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவின் 8-ம் நாளான இன்று தங்க சப்பரத்தில் கங்காளநாதா் தங்க திருஓட்டுடன் திருவீதி புறப்பாடு நிகழ்வு நடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோவிலில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும், பக்தி இன்னிசை, சமய சொற்பொழிவு, சிறுவர்களின் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி விழாவின் 8-ம் நாளான இன்று தங்க சப்பரத்தில் கங்காளநாதா் தங்க திருஓட்டுடன் திருவீதி புறப்பாடு நிகழ்வு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இ்ன்று காலையில் நடராஜா் முதலில் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், தொடா்ந்து பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தொடர்ந்து மாலையில் அன்னபூரணிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், கங்காளநாதராக திாிசடையும், தங்க திருஓடும் கையில் ஏந்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறாா்.

    அப்போது பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை கங்காளநாதா் திருஓட்டில் செலுத்துவார்கள். அதன்பின்னர் பஞ்ச வாத்தியங்கள் முழங்க குடைவரை வாசல் தீபாராதனைக்கு பின் மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெறும்.

    இரவில் சுவாமி தங்க கைலாச பா்வத வாகனத்திலும், அம்மன் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி தோ் கடாட்சம் கண்டருளி வீதி உலா வரும் நிகழ்வு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதனையொட்டி தேைர தயார்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. தேரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி கோவிலை சுற்றி உள்ள 4 ரதவீதிகளிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிப்பதற்காக இன்று தேர் மற்றும் அதன் வடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×