search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்-நாளை மறுநாள் மண்டல அலுவலகங்களில் மறியல் அறிவிப்பு
    X

    கொக்கிரகுளம் அறிவியல் மையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.

    நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்-நாளை மறுநாள் மண்டல அலுவலகங்களில் மறியல் அறிவிப்பு

    • தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நெல்லை மாநகராட்சியில் 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    நெல்லை:

    சுய உதவி குழுக்களின் கீழ் பணி புரியும் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 753 பேரை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் 2-வது நாளான இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அளிப்பதற்காக நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முன்பு உள்ள சாலையில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் அறிவியல் மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததை கண்டித்து போராட்டத்தை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் இந்த தூய்மை பணியாளர்களை ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதனை அறிந்து கடந்த மாதம் 27-ந்தேதி அனைத்து தூய்மை பணியாளர்களும் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் காரணமாக மாநகராட்சி அதிகாரி களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட கலெக்டர் உத்தரவு அடிப்படையில் தினசரி சம்பளம் ரூ.480 வழங்கி விடுவதாகவும், சுய உதவிக்குழு தூய்மை தொழிலாளர்கள் சுய உதவி குழுவாகவே நீடிப்பார்கள் என்று உறுதி அளித்தார்கள். இதன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இது தொடர்பான தீர்மானமும் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தற்போது ஒரு வார காலமாக சுய உதவிக்குழு தலைவர் மற்றும் செயலாளர்களிடம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குழு தலைவர் மற்றும் செயலாளர் கையெழுத்திட வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்தப்படு கிறார்கள் என்று புகார்கள் எழுந்தது.

    அதிகாரிகளின் இந்த செயல் தொழிலாளர் நலத்திட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது. அதிகாரிகளின் மிரட்டலை கைவிடக் கோரியும், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்க கூடாது என்று வலியுறுத்தியும், ஒப்பந்ததாரர்களிடம் சுய உதவி குழு தொழி லாளர்களை ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று நெல்லை மாநகராட்சியில் பணி செய்யும் அனைத்து பணியாளர்களும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் மோகன், பொது செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதனையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக சாலை மற்றும் மாவட்ட அறிவியல் மைய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே தூய்மை பணியாளர்களை சுய உதவி குழுவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க மாட்டோம் என்று மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரையிலும் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் தலைமையில் நாளை (புதன்கிழமை) மேலப்பாளையம் சந்தை பகுதியில் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒவ்வொரு மண்டல அலுவலகம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×