search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு கடினம் இல்லை- முதலிடம் பிடித்த செஞ்சி மாணவன் பேட்டி
    X

    பிரபஞ்சன்

    நீட் தேர்வு கடினம் இல்லை- முதலிடம் பிடித்த செஞ்சி மாணவன் பேட்டி

    • எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என சிறுவயது கனவெல்லாம் கிடையாது.
    • புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி அல்லது டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

    செஞ்சி:

    நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டம்மேல் மலையனூரை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது பிரபஞ்சன் குடும்பத்தினர் செஞ்சியில் வசித்து வருகிறார்கள்.

    நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பிரபஞ்சன் சென்னை அசோக் நகரில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்து வந்தார். அவர் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு தான் பிளஸ்-2 முடித்துள்ளேன். தேர்வின் முதல் முயற்சியிலே இந்த வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தாய் மாலா, தந்தை ஜெகதீஷ் ஆகியோர் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

    எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என சிறுவயது கனவெல்லாம் கிடையாது. உயிரியல் பாடம் பிடிக்கும். அதை நன்றாக படித்தேன். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி அல்லது டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

    முதுநிலை அறுவை கிச்சை நிபுணராக பணியாற்ற விரும்புகிறேன்.

    நான் 10-ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் செஞ்சியில் உள்ள சாரதா மெட்ரிக் பள்ளியில் படித்தேன். பின்னர் சென்னை மேல் அயனபாக்கத்தில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் படித்தேன். சி.பி.எஸ்.இ-யின் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்தேன். அதிலிருந்துதான் அதிக வினாக்கள் வருகின்றன. அதனை சரியாக படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

    நீட் மிகவும் சிறப்பான தேர்வு. இந்த தேர்வு நிச்சயம் தேவையான ஒன்றாகும். நீட் தேர்வு மிகவும் கடிமானது என்ற எண்ணத்தில் இருந்து வெளி வரவேண்டும். கடின உழைப்பு அதிக அளவு பயிற்சி என்பது தான் வெற்றியை தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் செஞ்சியை சேர்ந்தவர் என்பதால் செஞ்சியை சேர்ந்த பிரமுகர்கள் மாணவன் பிரபஞ்சனுக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபஞ்சனின் தந்தை ஜெகதீஷ் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகவும், தாய் மாலா நெகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகவும் பணிபுரிகின்றனர்.

    Next Story
    ×