என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி- தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருகிறார்கள்
- கடந்த கல்வியாண்டில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 14,979 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
சென்னை:
2023-24-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 13-ந்தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டில் நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் முதலிடத்தை தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் பெற்று சாதனை படைத்தார். தரவரிசையில் முதல் 50 இடங்களில் 6 இடங்களையும் தமிழக மாணவர்கள் பெற்று உள்ளனர். இது வரலாற்று சாதனையாகும்.
மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் பலர் அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 14,979 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 4,118 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 27.5 சதவீதம் ஆகும். இந்த கல்வியாண்டிலும் அரசு பள்ளி மாணவர்கள் 12,997 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 3,982 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 30.6 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல் 7.5 ததவீத உள் ஒதுக்கீட்டுக்கு முன்பு கடந்த 2018-ம் அண்டு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 2019-ம் ஆண்டு 6 பேர் சேர்ந்தனர்.
அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து 2020-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 435 மாணவர்களும், 2021-ம் ஆண்டு 540 மாணவர்களும், 2022-ம் ஆண்டு 567 மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்.
இந்த ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே போல் பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவ படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் 600-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 501 முதல் 600 மதிப்பெண்கள் வரை 23 மாணவர்களும், 401 முதல் 500 வரை 127 மாணவர்களும், 301 முதல் 400 வரை 437 மாணவர்களும், 201 முதல் 300 வரை 651 மாணவர்களும் 101 முதல் 200 மதிப்பெண்கள் வரை 2,741 மாணவர்களும் பெற்றுள்ளனர். இதன் மூலம் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கிறது.






