என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
- பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
- 3 குழுக்களாகப் பிரிந்து யானைகள் வாழை, அவரை செடி பயிர்களை நாசம் செய்து வருகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தால் விவசாயிகள் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதில் 3 குழுக்களாகப் பிரிந்து யானைகள் வாழை, அவரை செடி பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அகலகோட்டை, சிவன பள்ளி, சாவர பத்தம், பாலதோட்டனபள்ளி ஆகிய கிராமப்பகுதியில் சுற்றி வருகிறது. பகல் நேரங்களில் வயல்களில் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் நாசம் செய்யும் யானையை பொதுமக்கள் தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும் விரட்டினால் மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்து வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றது. இந்நிலையில் நேற்று மாலை பாலதோட்டப்பள்ளி அருகே உள்ள காந்திநகர், பாலே அக்கு ஆகிய கிராமத்தில் புகுந்து உலாவந்து அட்டகாசம் செய்து அங்கிருந்து வாழை, அவரை பயிர்களை தின்றும் நாசம் செய்து சாலையை கடந்து சென்றது. பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
இப்பகுதியில் யானைகள் உலா வருவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பொதுமக்களும் விவசாய பணிகள் செய்ய முடியாமல் அச்சமடைந்துள்ளனர். இதனால் இந்த யானைகளை அடர்ந்த காட்டுக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






