என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராமம்
- ஒரே ஒரு ஒத்தையடி பாதை தான் உள்ளது.
- நாளுக்கு நாள் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
அரவேணு:
கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி ஊராட்சியில் உள்ளது அட்டவளை பாரதி நகர். இங்கு 50க்கும் மேற்பட்ட தாயகம் திரும்பிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வாழும் மக்கள் கல்வி, மருத்துவம், அத்தியா வசிய தேவைகளுக்கு குன்னூர் அல்லது கோத்தகிரிக்கு தான் செல்ல வேண்டும். இதற்கும் ஒரே ஒரு ஒத்தையடி பாதை தான் உள்ளது. அதுவும் பாதி வரை மட்டுமே உள்ளது.
அதன்பின்னர் மலை மீது ஏறி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டும்.
குறிப்பாக பிரசவம், மருத்துவம், இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் போது எண்ணற்ற இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.
இதுதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சரியான சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறோம். அத்தியாவசிய அடிப்படை தேவைகளும் இங்கு இல்லை. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே வருகிறோம்.
நாளுக்கு நாள் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நடந்து செல்லவும் அச்சமாக உள்ளது.
நாங்கள் தினம் தினம் உயிரை கையில் பிடித்து இந்த சாலையில் நடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே எங்கள் ஊருக்கு சாலை அமைத்து கொடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






