search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் புதிய அரசு மருத்துவமனை கட்டிடத்திற்கு குடிநீருக்கான திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவு
    X

    நாமக்கல் புதிய அரசு மருத்துவமனை கட்டிடத்திற்கு குடிநீருக்கான திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவு

    • கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
    • மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவ கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் புதிய மருத்துவமனைக்கான பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் செயல்படாமல் உள்ளது.

    குடிநீர் வசதி

    மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வந்துவிட்ட நிலையில் முக்கிய தேவையான குடிநீா் வசதி இல்லாமல் உள்ளது.

    அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது 11 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும் ஒன்றில் கூட தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக நாமக்கல் நகராட்சி மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மாணவா்கள், ஆசிரியா்களின் விடுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்காக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதாவது, ஜேடா்பாளையத்தில் இருந்து பெரியமணலி அருகே முசிறிப்புதூருக்கு வரும் காவிரி குடிநீரை புதிய அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

    90 சதவீத பணிகள்

    சுமாா் 12.5 கி.மீ. தொலை வுடைய இந்தப் பகுதிக்கு குழாய் பதிக்கும் பணி 3 மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கியது. நாமக்கல் மாவட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஒப்பந்ததாரா்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.

    முசிறிப்புதூரில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக முசிறிப்புதூரில் 30 ஹெச்.பி திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. புது டெல்லியில் இருந்து அந்த மோட்டாா் வரவேண்டும் என்பதால் பணிகளில் தாமதம் நிலவுவதாக தெரிகிறது. அந்த மோட்டாா் பொருத்தப்பட்டு விட்டால் ஓரிரு மாதங்களில் புதிய அரசு மருத்துவ மனைக் கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

    இது குறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    நாமக்கல் புதிய அரசு மருத்துவ மனைக்காக குடிநீா் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வேலகவுண்டம்பட்டி அருகில் முசிறிப்புதூரில் இருந்து பொப்பம்பட்டி, மட்டப்பாறை புதூா், காதப்பள்ளி, காவல்துறை ஆயுதப்படை வளாகம் வழியாக 12.5 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 11.7 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப் பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் 22 ஏா் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ன.

    15 லட்சம் லிட்டர் தண்ணீர்

    30 லட்சம் லிட்டா் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. 30 குதிரைத் திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்கும். அதன்பிறகு முழுமையாக குடிநீா் வழங்குவதற்கான நடை முறைகள் பின்பற்றப்படும். இதற்காக 1000 லிட்டருக்கு ரூ.75 வீதம் மருத்துவமனை நிா்வாகத்திடம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

    சுமாா் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று உள்ளன. அடுத்து சித்த மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி அமையும்பட்சத்தில் குடிநீா் தேவையென்றால் கூடுதலாக குழாய்களை பதித்து நீரை விநியோகம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×